ADVERTISEMENT

அரசாங்க அனுமதி இல்லாமல் தொண்டு நிறுவனம் தொடங்கினால் 3 ஆண்டு சிறை மற்றும் 3,000 குவைத் தினார் அபராதம்… எச்சரிக்கை விடுத்த குவைத் அரசு!

Published: 26 Aug 2023, 2:17 PM |
Updated: 26 Aug 2023, 3:32 PM |
Posted By: admin

குவைத் நாட்டில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் அனுமதியில்லாமல், புதிதாக தொண்டு நிறுவனங்கள் தொடங்கக்கூடாது எனவும், அவ்வாறு தொடங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3,000 குவைத் தினார்கள் அபராதமாக விதிக்கப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. மேலும் தொண்டு நிறுவனங்கள் தொடங்குவதற்கான நடைமுறைகளையும் மக்களின் புரிதலுக்காக வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

குவைத்தில் தொண்டு நிறுவனங்கள் தொடங்குவதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் தேவையான நன்கொடைகளை சேகரிக்க அரசு அனுமதி வழங்குகின்றது. இதன்படி வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியை பெற்ற பின்னர் குவைத் நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ கிளைகளை திறக்கலாம். அதே சமயம் சமூக விவாகர அமைச்சரிடம் உரிமம் பெறாத வரை எந்த ஒரு நடவடிக்கையிலும் தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுவது குற்றமாகும்.

எனவே, உரிமம் பெறாத வரை எந்த ஒரு காரணத்திற்காகவும் பொதுமக்களிடம் நன்கொடை பெறுவதற்கு தொண்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், மதவெறியினை ஊக்குவித்தல், சமூக கட்டமைப்பை சேதப்படுத்துதல் போன்ற எந்த ஒரு பொது ஒழுக்கங்களை மீறும் செயல்களில் ஈடுபடுவது குற்றம் என்றும் அரசு விவரித்துள்ளது. மேலும் நன்கொடை விவரங்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி ஆண்டு அறிக்கையினை சமூக விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் அவர்கள் கடமைப்பட்டுள்ளனர் என்றும் குவைத் அரசு கூறியுள்ளது.

குவைத்தில் தொண்டு நிறுவனத்திற்கான உரிமம் பெற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 21 வயதுக்கு உட்பட்ட 50 குவைத் உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். மேலும் நிறுவனத்தை தொடங்குபவர்கள் வேறு குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றிருக்கக் கூடாது. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் பொழுது தொண்டு நிறுவனத்தின் பெயர், பண ஆதாரங்கள் மற்றும் நிதி தணிக்கை ஆகியவற்றை பற்றி முறையான விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பத்தை சமர்ப்பித்த 60 நாட்களுக்குள் அமைச்சகம் பதிலளிக்கும். மேலும் ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கும் ஒருவர் அவரது பணிக்காக சம்பளம் பெறக்கூடாது. தொண்டு நிறுவனங்களில் பண பரிவர்த்தனையானது குவைத்தின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவே மாற்றப்பட வேண்டும். தொண்டு நிறுவனத்தில் ஏதேனும் விதி மீறல்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டால் அமைச்சகத்தின் முடிவின் அடிப்படையில் நிறுவனம் கலைக்கப்படும்.

அரசாங்கத்தின் முறையான அனுமதி பெறாமல் தொண்டு நிறுவனங்கள் நடத்துவது கண்டறியப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3,000 குவைத் தினார்கள் அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் சேகரிக்கப்பட்ட நன்கொடைகள் அரசால் பறிமுதல் செய்யப்படும். கூடவே, தொண்டு நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட நிதியினை வேண்டுமென்றே மறைக்கவோ அல்லது அபகரிக்கவும் செய்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மட்டும் 5,000 குவைத் தினார்கள் அபராதம் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.