ADVERTISEMENT

நோய் தொற்று ஏற்படும் அபாயம்.. அபுதாபியில் மருத்துவ ஆய்வகத்தை மூடி சீல் வைத்த அதிகாரிகள்…!!

Published: 26 Aug 2023, 11:03 AM |
Updated: 26 Aug 2023, 12:05 PM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள மருத்துவ ஆய்வகமானது சுகாதார விதி மீறல்களை பின்பற்றாத காரணத்தினால் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது. அபுதாபியை சேர்ந்த சுகாதார அதிகாரிகள் மருத்துவ ஆய்வகத்தை ஆய்வு செய்த பொழுது, விதிமீறல்களை கண்டறிந்ததால் உடனடியாக அந்த ஆய்வகத்தை மூடும்படி உத்தரவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ஆய்வகங்கள் பின்பற்ற வேண்டிய குறிப்பிட்ட விதிமுறைகள், கொள்கைகள் போன்றவை சரியாக பின்பற்றப்படவில்லை எனவும், மேலும் நோயாளிகளுக்கு ரிப்போர்ட் அளிக்கும் எலக்ட்ரானிக் ரிப்போர்ட் சிஸ்டம் விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, மருத்துவ கவுன்சிலின் நெறிமுறைகளுக்கு இணங்காததால் ஆய்வகம் மூடப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

பொதுமக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகளால் குறைகள் சரிசெய்யப்படும் வரை ஆய்வகமானது மூடப்பட்டு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சமூகத்தில் வாழும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் உடல் நலனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மருத்துவத்துறைக்கு உள்ளது என்றும், இந்த நடவடிக்கையானது மற்ற ஆய்வகங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கடந்த மே மாதம் இதே போன்று பாதுகாப்பு விதி மீறல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக அபுதாபியில் செயல்பட்ட சுகாதார மையம் ஒன்றும் அதிகாரிகளால் மூடப்பட்டது. ரத்த மாதிரிகளை சேமிக்கும் கொள்கலன்களை சரியாக அகற்றாதது மற்றும் மருத்துவ கழிவுகளை அகற்றுவது போன்றவற்றில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பின்பற்ற தவறியதன் காரணமாக அதிகாரிகள் உடனடியாக அந்த மையத்தை மூடியது குறிப்பிடத்தக்கது.

எனவே, பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி, பொதுமக்களுக்கு தொற்று ஏற்பாடாத வண்ணம் தடுக்கும் பொறுப்பு மருத்துவத்துறைக்கு உள்ளது என்பதை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும் பொது மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு எமிரேட்டில் செயல்படும் அனைத்து சுகாதார மையங்களையும் அதன் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் அபுதாபி சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT