ADVERTISEMENT

மத்திய கிழக்கு நாடுகளில் சிறந்த விமான நிலையங்களாக தேர்வான ஓமானின் இரண்டு விமான நிலையங்கள்..!!

Published: 8 Sep 2023, 4:29 PM |
Updated: 8 Sep 2023, 4:47 PM |
Posted By: admin

ஓமானில் இருக்கக்கூடிய இரண்டு விமான நிலையங்கள் மத்திய கிழக்கின் சிறந்த விமான நிலையங்களாக பெயரெடுத்துள்ளன. அதில் மஸ்கட் சர்வதேச விமான நிலையம் 15 முதல் 25 மில்லியன் பயணிகள் பிரிவில் மத்திய கிழக்கின் சிறந்த விமான நிலையங்களின் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அதே நேரத்தில் ஓமானில் இருக்கக்கூடிய மற்றொரு விமான நிலையமான சலாலா விமான நிலையம் இரண்டு மில்லியன் பயணிகள் பிரிவில் மத்திய கிழக்கின் சிறந்த விமான நிலையங்களின் இடம் பிடித்துள்ளது.

ADVERTISEMENT

விமான நிலையத்தின் தரம், அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள், எளிதான பயணங்கள் மற்றும் விமான நிலையத்தின் தூய்மை ஆகியவற்றின் அடிப்படையில் தரப்புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. கொரிய நாட்டைச் சேர்ந்த இஞ்சியோனில் சர்வதேச விமான நிலைய கவுன்சில், சர்வதேச பயண தொழில்நுட்ப நிறுவனமான “Amadeus” உடன் இணைந்து நடத்திய விமான நிலைய சேவை தர விருது வழங்கும் விழாவின் போது இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் பயணிகளிடம் சேகரிக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளை மையமாக வைத்து இந்த தரமான விமான நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மஸ்கட் சர்வதேச விமான நிலையம் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளும் பொழுது அசுரவேக வளர்ச்சியை அடைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், வளர்ச்சியின் வேகம் குறுகிய காலத்தில் இரட்டிப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

எனவேதான் சுற்றுலாத்துறை, விமான நிலையங்கள், பயணிகளின் எண்ணிக்கை போன்ற சம்பந்தப்பட்ட பல்வேறு புள்ளி விவரங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. அது மட்டும் அல்லாமல், எதிர்காலத்தில் ஓமானிற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு விமான நிலையம் 56 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை கையாளும் வகையில் விரிவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத் துணைத் தலைவரும், ஓமன் விமான நிலையத்தின் செயல்பாட்டுத் தலைவருமான சவுத் பின் நாசர் அல்-ஹுபைஷி கூறும்பொழுது இரண்டு விமான நிலையங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் விமான நிறுவனங்களில் உதவியால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

கொரோனா நோய் கட்டுப்பாட்டிற்கு பிறகு ஓமான் சுற்றுலா துறையில் பெருமளவு வளர்ச்சி கண்டு வருவதால் இனி வரும் காலங்களில் சேவையானது மேலும் மேம்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் பயணிகளின் எண்ணிக்கையானது 3,045,519 என பதிவாகிய நிலையில், 2023 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் 71.5 சதவீதம் அதிகரித்து 5,223,992 பயணிகளைப் பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஓமான் ஏர்போர்ட்ஸ், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகம் மற்றும் ராயல் ஓமன் காவல்துறை ஆகியவை ஒன்றாக இணைந்து சுற்றுலா துறையின் வளர்ச்சியினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.