ADVERTISEMENT

குடிக்க தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் குவைத்தில் தவித்த தமிழக தொழிலாளர்கள்.. இந்திய தூதரகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் நாடு திரும்ப உதவி..!!

Published: 10 Sep 2023, 3:09 PM |
Updated: 10 Sep 2023, 4:11 PM |
Posted By: admin

வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி வரும் இந்தியர்களில் சிலர் தவறான இடத்தில் வேலைக்கு சேர்ந்து சிக்கி தவிக்கும் செய்தி நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒன்றுதான். இதேபோன்ற ஒரு சம்பவம் தான் குவைத்தில் துப்புரவு பணியாளர்களாக வேலைக்கு வந்தவர்களுக்கு நடந்தேறி இருக்கின்றது.

ADVERTISEMENT

குவைத்திற்கு வேலை தேடி வந்து செய்வதறியாமல் சிக்கித் தவித்த இருபது தமிழக தொழிலாளர்கள் குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இத்தொழிலாளர்கள் குவைத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் துப்புரவுத் தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களுக்கு குறைந்த சம்பளத்தில் உணவு கொடுக்கப்படாமல் தங்குமிடம் மட்டும் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது. சிக்கித் தவித்த இவர்கள் அனைவரும் இந்த பணிக்கு வருவதற்கு ஏஜென்டிடம் பெருமளவு தொகையை கட்டணமாக கட்டி வேலைக்கு வந்தனர். இருப்பினும், ஒரு வருடத்திற்குப் பிறகு அவர்களின் விசாவை புதுப்பிப்பதற்காக 475 KD செலுத்துமாறு நிறுவனம் அவர்களிடம் கட்டணமாக கேட்டுள்ளது.

ADVERTISEMENT

குறைந்த சம்பளத்தின் காரணமாக ஏற்கனவே அவர்கள் தங்கள் உணவு மற்றும் இதர செலவுகளை நிர்வகிக்க போதிய சம்பளம் இல்லாமல் தவித்து வந்த நிலையில் நிறுவனம் கேட்டபடி விசாவை புதுப்பிக்க கேட்ட பணத்தை செலுத்த முடியாத நிலையில் அவர்கள் அனைவரும் இருந்துள்ளனர்.

எனவே பணி செய்யும் நிறுவனத்திடம் குடியுரிமையை ரத்து செய்து தங்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பும் படி கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் நிறுவனம் அவர்களின் கோரிக்கைகளை ஏற்காமல், சம்பளம் வழங்குவதை நிறுத்தியதுடன் அவர்களின் தங்குமிடங்களில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்துள்ளது.

ADVERTISEMENT

இவர்களின் நிலையை அறிந்த சமூக ஆர்வலர் திரு.மதி என்பவர் இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு இந்த செய்தியை கொண்டு சென்றதுடன், இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவர்கள் தங்கியிருக்கும் அறைகளுக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் மீண்டும் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் குறித்து தமிழக அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இந்திய தூதரகத்தின் தொடர்ச்சியான முயற்சியின் காரணமாக, நிறுவனம் இறுதியாக அனைத்து தொழிலாளர்களுக்கும் விமான டிக்கெட்டுகளை வழங்கியதால், இந்திய தூதரகம் மற்றும் சமூக உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தியாவுக்கு இவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குவைத்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய தமிழக தொழிலாளர்கள் சென்னையை அடைந்ததும் குவைத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் உள்ள என்ஆர்டி நலக் குழுவிடம் புகார் அளித்ததுடன், தாங்கள் நாடு திரும்புவதற்கு உதவி செய்த இந்திய தூதரகம், தமிழ்நாடு அரசு மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு தங்கள் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.