ADVERTISEMENT

இந்தியா-கனடா பிரச்சனை.. விசா சேவையை ரத்து செய்துள்ள இந்தியா… கனடாவில் இருக்கும் இந்தியர்கள் பத்திரமாக இருக்கும் படி இந்திய அமைச்சகம் அறிவுறுத்தல்..!!

Published: 21 Sep 2023, 8:39 PM |
Updated: 21 Sep 2023, 8:57 PM |
Posted By: admin

கடந்த ஜூன் மாதம் கனடா நாட்டில் சீக்கியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கனடா மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே, அரசியல் ரீதியான உள்பூசல்கள் நிலவி வருவதால் அதிகாரப்பூர்வ விசா விண்ணப்ப மைய இணையதளத்தின் ஆலோசனையின்படி, செப்டம்பர் 21ஆம் தேதி முதல் கனடாவில் விசா சேவைகளை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதன்படி, இந்திய மிஷன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பின் காரணமாக பல்வேறு செயல்பாட்டு காரணங்களால் செப்டம்பர் 21, 2023 முதல், இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. மேலும் விசா சேவைகள் எப்பொழுது தொடங்கப்படும் என்பதற்கான பதிலுக்கு BLS இணையதளத்தினை தொடர்ந்து பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புது டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகமானது, கனடா நாட்டில் வாழும் இந்தியர்களுக்கான பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்திய குடிமக்கள் அனைவரும் குறிப்பாக மாணவர்கள் இந்தியாவிற்கு எதிரான அரசியல் ரீதியாக நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக இந்தியர்களை எதிர்க்கும் விதமாக மற்றும் இந்திய சமூகங்களை குறிவைக்கும் விதமாக அச்சுறுத்தல்கள் நடைபெறும் இடங்களை தவிர்க்குமாறு இந்தியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பனிப்போர் காரணமாக இரு நாடுகளின் தூதரக அதிகாரிகளும் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவரும் நிலையில், உண்மையாக குற்றத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்குமாறு இந்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் சுமூகமான நிலை எட்டப்படாத காரணத்தினால் கனடாவில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி புது டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT