ADVERTISEMENT

அமீரகத்தில் இன்றிரவு முதல் ஞாயிறு வரை மீண்டும் ஒரு கனமழை பெய்யும்.. தயார் நிலையில் மீட்பு குழுவினர்கள்..!!

Published: 8 Mar 2024, 6:29 PM |
Updated: 8 Mar 2024, 6:30 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே இடைவிடாத கனமழை, ஆலங்கட்டி மழை என நிலையற்ற வானிலை நாட்டின் பல்வேறு பகுதிகளைத் தாக்கியதைத் தொடர்ந்து, தற்போது அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் தேசிய வானிலை மையம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, இன்றிரவு (மார்ச் 8, வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுகிழமை (மார்ச் 10) வரை அமீரகத்தில் அதிக இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இதனால் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இத்தகைய மோசமான வானிலையை திறம்பட எதிர்கொள்ளவும், வானிலை தொடர்பான ஏதேனும் சம்பவங்களுக்கு விரைந்து பதிலளிக்க காவல்துறை குழுக்கள் முழுமையாக தயாராக இருப்பதை உறுதி செய்யவும் கூட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், இன்றைய தினம் அமீரகக் குடியிருப்பாளர்கள் மேகமூட்டமான வானிலையை மட்டுமே எதிர்பார்க்கலாம் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது. மேலும், வெப்பச்சலன மேகங்கள், நாட்டில் ஆங்காங்கே குறிப்பாக மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவை ஏற்படுத்தும் எனவும், நாள் முழுவதும் வெப்பநிலை உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில பகுதிகளில் காற்று லேசானது முதல் மிதமானது வரை மாறுபடும் என்றும், அவ்வப்போது காற்று வலுப்பெற்று தூசி மற்றும் மணலுடன் வீசும் என்பதால் கிடைமட்டத் தெரிவுநிலை குறையும் என்றும் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வானிலை முன்னறிவிப்பு:

NCM வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், இன்றிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வானிலை தீவிரமடையும் என்றும், சனிக்கிழமை உச்சத்தை எட்டும் என்றும் கூறியுள்ளது.

குறிப்பாக கனமழை பெய்யும் பகுதிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்த்து, அதிகாரப்பூர்வ தகவல் ஆதாரங்களை மட்டுமே நம்புமாறும் NCEMA குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel