ADVERTISEMENT

அமீரகத்தில் நீடிக்கும் நிலையற்ற வானிலை.. விமான சேவைகள் நாளையும் பாதிக்கப்படுமா..?

Published: 9 Mar 2024, 9:03 PM |
Updated: 9 Mar 2024, 9:08 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நிலவும் நிலையற்ற வானிலை நாளையும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த வார இறுதியில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த விமானப் பயணிகள் தாமதத்தைத் தவிர்க்க விமான நிலையங்களுக்கு முன்கூட்டியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இன்று காலையில் துபாய் உட்பட அமீரகம் முழுவதும் நிலவிய மோசமான வானிலை காரணமாக, துபாய் வந்த சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டிருந்தது. மேலும் இங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் கனமழை காரணமாக சில மணி நேரங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

எனினும், தற்சமயம் துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB), அபுதாபியின் சையத் சர்வதேச விமான நிலையம் (AUH) மற்றும் ஷார்ஜா சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றிலிருந்து விமானங்கள் திட்டமிட்டப்படி சரியான நேரத்திற்கு இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அதேசமயம், எமிரேட்ஸ், எதிஹாட், ஃப்ளைதுபாய் மற்றும் ஏர் அரேபியா போன்ற அமீரகத்தை தளமாகக் கொண்ட விமான நிறுவனங்களும், துபாய்க்கு விமான சேவை வழங்கும் மற்ற விமான நிறுவனங்களும் தாமதம் குறித்து இதுவரை எதையும் அறிவிக்கவில்லை.

ஆயினும், அமீரகத்தில் நிலையற்ற வானிலை நாளையும் தொடரும் என்பதனால், பயணிகள் விமான நிலையத்திற்கு முன்கூட்டியே வருமாறும், விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 4 மணி நேரத்திற்கு முன்னதாக வரவேண்டும் என்றும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட முன்னறிவிப்பின் படி, வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை மாலை வரை தீவிர கனமழை நீடிக்கும் என கூறப்பட்டிருந்தாலும், நாளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேக மூட்டமான வானிலை நிலவும் என்றும், ஒரு சில பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

இருப்பினும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மட்டுமே இந்த மழையால் பாதிக்கப்படும் என்றும் தேசிய வானிலை மையம் கணித்துள்ளது. அதேபோன்று திங்கள்கிழமை நாட்டில் வறண்ட காலநிலையாக இருந்தாலும், காலையில் மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் NCM அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel