ADVERTISEMENT

துபாயில் நிலவும் மோசமான வானிலை.. திருப்பி விடப்பட்ட விமானங்கள்.. புறப்படுவதிலும் தாமதம்.. அறிவுரைகளை வழங்கிய விமான நிறுவனங்கள்..

Published: 9 Mar 2024, 12:12 PM |
Updated: 9 Mar 2024, 1:57 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, வெவ்வேறு நாடுகளிலிருந்து இன்று (சனிக்கிழமை) துபாய் வரக்கூடிய 13 விமானங்கள் துபாயில் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டதால், அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக துபாய் சர்வதேச விமான நிலையங்கள் (Dubai International Airport- DXB) உறுதிப்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT

அதில், ஒரு சில விமானங்கள் அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையத்திற்கு (Zayed International Airport) திருப்பி விடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சில விமானங்கள் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் (DWC), மஸ்கட் சர்வதேச விமான நிலையம் (MCT) மற்றும் ஹமத் சர்வதேச விமான நிலையம் (DOH) ஆகியவற்றிற்கும் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் விமான நிலையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் “எங்கள் மதிப்புமிக்க பயணிகள் அனுபவிக்கும் எந்த சிரமத்தையும் குறைக்க நாங்கள் எங்கள் சேவை கூட்டாளர்கள் மற்றும் விமான நிறுவனங்களுடன் தீவிரமாக ஒத்துழைத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதேபோல் இன்று (சனிக்கிழமை) காலை துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) புறப்படும் சில விமானங்களும் ஒன்று முதல் இரண்டு மணிநேரம் வரை தாமதத்தை சந்திக்கின்றன என்றும், இதற்கு ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நிலவும் மோசமான வானிலையே காரணம் என்றும் கூறப்படுகிறது.

துபாய் விமான நிலையத்தைப் போன்றே அபுதாபியின் சையத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (AUH) செல்லக்கூடிய விமானங்களும் இதேபோன்ற தாமதத்தை எதிர்கொள்கின்றன என கூறப்பட்டுள்ளது. ஆனால் அபுதாபி சையத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) விமானங்கள் தற்போது வழக்கம் போல் இயங்கி வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திலிருந்து (SHJ) இயக்கப்படும் ஏறக்குறைய அனைத்து விமானங்களும் திட்டமிட்டபடி இயக்கப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான அறிவுறுத்தல்கள்

துபாய் விமான நிலையமானது பயணிகளுக்கு மோசமான வானிலை காரணமாக ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க விமான நிலையம் வருவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்த அறிவிப்பில் “DXB-யில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகள் தங்கள் விமான நிலையைச் சரிபார்த்து அதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். சாலைகளில் நெரிசல் மற்றும் தண்ணீர் தேங்குவதால், விமான நிலையத்திற்கு பயணிக்க கூடுதல் நேரத்தை செலுத்துமாறு பரிந்துரைக்கிறோம். பயணிகள் துபாய் மெட்ரோவை சுமூகமான போக்குவரத்திற்கு பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளது.

அமீரகத்தின் மற்றொரு தேசிய விமான நிறுவனமான Etihad Airways வெளியிட்ட அறிவிப்பில், “மார்ச் 8 முதல் 10 வரை அமீரகம் முழுவதும் முன்னறிவிக்கப்பட்ட பாதகமான வானிலை காரணமாக, பயணிகள் தங்கள் விமானம் புறப்படும் சமீபத்திய தகவல்களுக்கு etihad.com ஐ தவறாமல் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகள் விமான நிலையத்திற்கு வர கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று வெளியிட்டுள்ளது.

இது போன்றே ஃப்ளை துபாய் (Fly dubai), ஏர் அரேபியா (Air Arabia) போன்ற விமான நிறுவனங்களும் பயணிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. அத்துடன் பயணிகள் புறப்படுவதற்கு 3 முதல் 4 மணி நேரம் முன்னதாகவே விமான நிலையம் வந்து விடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel