ADVERTISEMENT

துபாய் கடற்கரையில் பயன்பாட்டிற்கு வந்த ரோபோ..!! விதிமீறலை கண்டறிய RTAவின் புதிய யுக்தி..!!

Published: 22 Mar 2024, 10:09 AM |
Updated: 22 Mar 2024, 10:09 AM |
Posted By: admin

துபாயில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் துபாய் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சாலைகளில் சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துபவர்களின் விதிமீறல்களைக் கண்டறிய ரோபோவை RTA வெகுவிரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.

ADVERTISEMENT

இந்நிலையில், நேற்று மார்ச் 21, வியாழக்கிழமையன்று ஜுமேரா 3 கடற்கரை பகுதியில், சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர்களைக் கண்காணிக்க AI மூலம் இயக்கப்படும் 200 கிலோ எடையுள்ள அதிநவீன ரோபோவை RTA ரோந்து பணிக்காக பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

ADVERTISEMENT

தற்போது, இந்த ரோபோ முதல் கட்ட சோதனைக்காக களமிறக்கப்பட்டிருப்பதாகவும், ஹெல்மெட் அணியாதது, நியமிக்கப்படாத இடங்களில் பார்க்கிங் செய்வது, ஒரு இ-ஸ்கூட்டர்களில் பல நபர்கள் சவாரி செய்வது மற்றும் பாதசாரிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஓட்டுவது போன்ற பல்வேறு விதிமீறல்களைக் கண்டறிவதில், ரோபோவின் செயல்பாட்டை நன்றாக கணித்து அதனை சரிசெய்வதே ஒரு மாத சோதனைக் காலத்தின் நோக்கம் என்றும் RTA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன ரோபோட்டிக்ஸ் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகள் வழங்குநரான டெர்மினஸ் (Terminus) குழுமத்தால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ, தன்னாட்சி முறையில் இயங்குகிறது என்றாலும், சோதனைக் கட்டம் என்பதால் அவசரகாலத்தில் உதவ ஒரு பாதுகாப்பு அதிகாரியும் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து RTAவின் எண்டர்பிரைஸ் கமாண்ட் அண்ட் கன்ட்ரோல் டிபார்ட்மெண்ட் (EC3) இயக்குனர் ஹமத் அலாஃபிஃபி கூறுகையில், இந்த ரோபோ எதிர்வரும் 30 நாட்களுக்கு வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் மாலை 5 மணி முதல் அதிகாலை 1 மணி வரையிலும், ஜுமேரா 3 கடற்கரையின் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் பாதையில் சுமார் 600 மீட்டர் பரப்பளவைக் கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இந்த ரோபோவால் 85 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்துடன் 2 கிமீ வரையிலான பரப்பளவில் கண்காணித்து, விதிமீறல்களை கண்டறிய முடியும் என்றும், 5 வினாடிகளுக்குள் விதிமீறல் குறித்த தரவை கட்டுப்பாட்டு அறைக்கு வழங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், இந்த ரோபோ 1.5 மீட்டர் இடைவெளிக்குள் எந்தவொரு பொருளையும் அல்லது தனி நபரையும் கண்டறிந்தால் அதற்கேற்ப தனது நகர்வை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ளும் திறன் கொண்டிருப்பதால், துபாயில் உள்ள அனைத்து சாலை பயனர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்றும் RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஒரு மாத சோதனை காலத்தில் ரோபாவால் கண்டறியப்படும் விதிமீறல்களுக்காக, சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர் ரைடர்களுக்கு அபராதம் எதுவும் வழங்கப்படாது என்று RTA தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel