ADVERTISEMENT

உயிரை பறித்த ‘மயோனைஸ்’ பிராண்ட் குறித்து அபுதாபி உணவு பாதுகாப்பு ஆணையம் அறிக்கை.. 70 பேர் மருத்துவமனையிலும் அனுமதி..!!

Published: 14 May 2024, 7:57 PM |
Updated: 14 May 2024, 8:06 PM |
Posted By: admin

உயிரைக் கொல்லும் விஷத்தன்மை உள்ள பாக்டீரியா கண்டறியப்பட்ட மயோனைஸ் பிராண்டை சவூதி அரேபிய அரசு தடைவிதித்தைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த மயோனைஸ் பிராண்டானது அபுதாபி சந்தையில் விற்கப்படவில்லை என்றும், அது நகரத்தில் உள்ள விற்பனை நிலையங்களுக்குள் நுழையாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் அபுதாபியில் உள்ள அதிகாரிகள் இன்று செவ்வாய்கிழமை (மே 14) அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், துறைமுகங்களில் பாதுகாப்பு மற்றும் விவரக்குறிப்புகளுக்கு இணங்காத எந்த தயாரிப்பும், எமிரேட்டின் உள்ளே நுழையாமல் இருப்பதை உறுதிசெய்ய கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் அபுதாபி வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையம் (ADAFSA) கூறியுள்ளது.

அத்துடன், எந்தவொரு பாதுகாப்பற்ற மற்றும் ஆரோக்கியமற்ற தயாரிப்புகளும் எமிரேட்டின் சந்தைகளை சென்றடைவதைத் தடுக்க தேவையான அனைத்து வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் உணவுப் பாதுகாப்பு ஆணையம் நுகர்வோருக்கு உறுதியளித்துள்ளது.

ADVERTISEMENT

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (மே 12) ரியாத்தில் உள்ள ஹம்பர்கினி (Hamburgini) உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவானது விஷமான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 75 பேர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சவுதி அதிகாரிகள் நாடு முழுவதும் பான் டும் மயோனைஸின் விநியோகத்தை நிறுத்தியதுடன், அந்த தயாரிப்பை திரும்பப் பெறவும் அறிவித்தனர்.

ADVERTISEMENT

சவூதியில் உள்ள உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் கூற்றுப்படி, ஆய்வகப் பகுப்பாய்வின் போது, அந்த உணவகத்தில் வழங்கப்பட்ட பான் டும் மயோனைஸின் மாதிரியில், பொட்டுலிசத்திற்கு (botulism) காரணமான க்ளோஸ்ட்ரிடியம் போட்யூலினம் பாக்டீரியா (Clostridium botulinum bacteria), இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த மயோனைஸை உட்கொண்ட அனைவருக்கும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக சவூதியின் உணவு மற்றும் மருந்து ஆணையம் கூறியுள்ளது.

இதே போன்று, கடந்த மாதம் கலப்படம் கொண்ட சில இந்திய மசாலா பிராண்டுகளில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதாக கூறி சில நாடுகள் தடைவிதித்ததை தொடர்ந்து, துபாய் முனிசிபாலிட்டி இதனை உற்று நோக்குவதாகவும், அமீரக சந்தைகளில் விற்கப்படும் பொருட்களின் தரம் ஆய்வகங்களில் சரிபார்க்கப்பட்ட பின்னரே விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் துபாய் முனிசிபாலிட்டியும் அறிவித்திருந்தது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel