ADVERTISEMENT

UAE: மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்ற இந்திய நிறுவனத்தை காணவில்லை.. 70 ஊழியர்களும் தலைமறைவு.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்.. பாலிவுட் நடிகரின் மீதும் குற்றச்சாட்டு..!!

Published: 15 May 2024, 8:36 PM |
Updated: 15 May 2024, 8:46 PM |
Posted By: admin

துபாயில் உள்ள பர் துபாய் பகுதியில் இருக்கும் அல் ஜவஹர் மையத்தில், புளூ சிப் குழுமத்தின் மூன்றாவது மாடி அலுவலகம் கடந்த வாரம் வரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த அலுவலகம் காலியாக உள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளரையும் அங்கு பணிபுரிந்த 70 ஊழியர்களும் தலைமறைவாகி உள்ளனர்.

ADVERTISEMENT

தங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 70-மில்லியன் டாலர் மதிப்பில் 700 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் அமீரகத்தில் இயங்கி வந்த புளூ சிப் நிறுவனம், 18 மாதங்களுக்கு செலுத்தப்படும் குறைந்தபட்சம் 10,000 டாலர் முதலீட்டில் மூன்று சதவீத மாதாந்திர வருமானம் என்ற கவர்ச்சியான ஒப்பந்தத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது.

ஆனால், திடீரென வாடிக்கையாளர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த மாதாந்திர வருமானம் நிறுத்தப்பட்டதுடன், வங்கிகளில் செலுத்திய காசோலைகளும் பவுன்ஸ் ஆகியுள்ளது. மேலும் இது குறித்த விபரங்கள் கேட்க நிறுவனத்திற்கு அழைத்தும் பதில் இல்லை. இந்நிலையில் நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்க்கும் போது, புளூ சிப் நிறுவனம் செயல்பட்ட அலுவலகம் காலியாக இருந்ததை கண்டு முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

புலம்பித் தவிக்கும் முதலீட்டாளர்கள்:

இப்போது, ​​​​முதலீட்டாளர்கள் தாங்கள் இழந்த பணத்திற்காக போராடுகின்ற நிலையில், ப்ளூ சிப்பின் அலுவலகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. நிறுவனத்தை நம்பி முதலீடு செய்த ஏராளமானோர் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதில் முதலீடு செய்த இந்திய வெளிநாட்டவர் ஒருவர் தனக்கு 1 மில்லியன் திர்ஹம் இழப்பு ஏற்படக்கூடும் என்று புலம்பியுள்ளார்.

இவரைப்போலவே, இந்தியாவைச் சேர்ந்த வேறு இருவரும் இதில் முதலீடு செய்வதற்காக தங்கள் கிரெடிட் கார்டுகளில் கடன் பெற்றதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், புது தில்லியைச் சேர்ந்த ஒரு நபர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள தங்கள் சொத்துக்களை விற்கும் அளவுக்குச் சென்றதும் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், செய்தி ஊடகத்துடன் பகிரப்பட்ட ஒரு எக்செல் ஷீட்டின் படி, வெறும் 90 நபர்களிடமிருந்து மட்டும் $17 மில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை இந்நிறுவனம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது மொத்த முதலீடுகளின் ஒரு பகுதி மட்டும்தான் என்று 492,000 திர்ஹம்கஸ் தொகையை முதலீடு செய்த சலீம் என்ற நபர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் குழுக்களில் மட்டும் 345 முதலீட்டாளர்கள் இருப்பதாகவும், அவை அனைத்தையும் கணக்கிட்டால் மொத்தப் பட்டியல் இதை விடவும் பெரிதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்த பட்டியல் முழுமையானது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளர்.

இந்த சம்பவமானது துபாய் காவல்துறையின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், பல காசோலைகள் பவுன்ஸ் ஆகியதால் அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் நிறுவனர்-CEO மீது பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.

பாலிவுட் நட்சத்திரம் சோனு சூட் கூறியது என்ன?

இந்த விவாகரத்தில் இந்திய நடிகர் சோனு சூட் மீது பல்வேறு முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதாவது, 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் துபாயில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பாலிவுட் நடிகர் சோனு சூத் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ப்ளூ சிப் டோக்கனை தொடங்கி வைத்துள்ளார்.

இதனால், தற்போது ப்ளூ சிப்பின் பல்வேறு ஒப்பந்தங்களில் முதலீடு செய்யத் தவறாக வழிநடத்தப்பட்டதாக அவர் மீது முதலீட்டாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இருப்பினும், செய்தி ஊடகங்களிடம் தொலைபேசியில் பேசிய அவர், “நாங்கள் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளும்போது அதை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்று அர்த்தமல்ல. இப்பிரச்சினையைப் பற்றி அறிந்திருகிறேன், முதலீட்டாளர்களுக்கு உதவ முயற்சிக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.

ஆன்லைன் கண்காணிப்பு கருவியில் இருந்து நீக்கம்:

இது தவிர, அந்நிய செலாவணி சந்தையில் செயல்திறனைக் கண்காணிப்பதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் பயன்படுத்தப்படும் ஆன்லைன் கருவியான Myfxbook இல் பட்டியலிடப்பட்டிருந்த புளூ சிப் குழும நிறுவனங்கள் இன்று புதன்கிழமை மர்மமான முறையில் அகற்றப்பட்டிருக்கிறது.

இப்படியான சூழலில், இந்நிறுவனமானது அமீரகத்தில் உள்ள மத்திய நிதி ஒழுங்குமுறை நிறுவனமான செக்யூரிட்டிஸ் அண்ட் கமாடிட்டிஸ் அத்தாரிட்டிகளால் (SCA) உரிமம் பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel