ADVERTISEMENT

நடுவானில் மீண்டும் ஒரு ‘டர்புலன்ஸ்’ பாதிப்பில் சிக்கிய கத்தார் ஏர்வேஸ் விமானம்.. 12 பயணிகள் காயம்..!!

Published: 26 May 2024, 7:06 PM |
Updated: 26 May 2024, 7:06 PM |
Posted By: admin

ஒரு சில நாட்களுக்கு முன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் ரக விமானமானது அதிதீவர டர்புலனஸ் (turbulence) நிகழ்வால் பாதிக்கப்பட்டதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதுடன் பல பயணிகளும் காயமடைந்தனர். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் தற்பொழுது மற்றுமொரு விமானமும் இந்த டர்புலன்ஸ் நிகழ்வால் பாதிப்படைந்துள்ளது.

ADVERTISEMENT

தோஹாவில் இருந்து அயர்லாந்திற்கு சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானம் டர்புலன்ஸால் பாதிக்கப்பட்டது என்றும் இதில் பயணித்த 12 பேர் இந்த டர்புலன்ஸ் நிகழ்வால் காயமடைந்தனர் என்றும் அயர்லாந்தில் உள்ள டப்ளின் விமான நிலையம் கூறியுள்ளது. இருப்பினும் விமானம் பாதுகாப்பாகவும் திட்டமிடப்பட்டபடி தரையிறங்கியதாகவும் விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன்படி டர்புலன்ஸ் எனும் காற்று கொந்தளிப்பு பாதிப்புக்கு உள்ளான விமானம் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான QR017 எண் கொண்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் சரியாக துருக்கி வான்பரப்பில் பறந்த போது டர்புலன்ஸால் விமானம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்த விமானம் டப்ளின் நேரப்படி மதியம் 1 மணிக்கு (1200 GMT) பத்திரமாக தரையிறங்கியதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் விமான நிலையம் கூறுகையில் “விமானம் தரையிறங்கியதும், விமான நிலைய காவல்துறை மற்றும் எங்கள் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உள்ளிட்ட அவசர சேவைகள் மேற்கொள்ளப்பட்டன. விமானத்தில் பயணித்த ஆறு பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் என மொத்தம் 12 பேர் இதில் காயமடைந்துள்ளனர். விமானமானது துருக்கிக்கு மேலே பறந்த போது டர்புலன்ஸை அனுபவித்ததாக பயணிகள் புகாரளித்தனர்” என ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

இதே போல் கடந்த 5 நாட்களுக்கு முன் லண்டனில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் கடுமையான டர்புலன்ஸ் காரணமாக பாங்காக்கில் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. இதில் 73 வயதான பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த நபர் உயிரிழந்ததுடன் விமானத்தில் பயணித்த 20 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் 2021 ஆய்வின்படி, டர்புலன்ஸ் தொடர்பான விமான விபத்துக்கள் மிகவும் பொதுவான வகையாகும். 2009 முதல் 2018 வரை, டர்புலன்ஸ் நிகழ்வானது விமான விபத்துக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக இருப்பதாக அமெரிக்க ஏஜென்சி கண்டறிந்தது. அத்துடன் பெரும்பாலானவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடுமையான காயங்களை ஏற்படுத்தியது என்றும், ஆனால் விமானத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel