அமீரகத்தில் வாகனம் வைத்திருப்பவர்கள் அல்லது ஒட்டுநராக வேலை செய்பவர்கள் எவ்வளவுதான் சிறந்த ஓட்டுநராக இருந்தாலும், சில நேரங்களில் அவர்களும் தவறுகள் செய்வதுண்டு. உதாரணமாக வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் பொது மொபைல் போனை பயன்படுத்துவது, அல்லது பாதசாரிகளுக்கு வழி விடாமல் செல்வது போன்ற தவறுகளை செய்தால் வாகன ஓட்டிகளுக்கு ப்ளாக் பாயிண்ட்கள் வழங்கப்பட்டும்.
இவ்வாறான தவறுகள் மற்றும் தீவிரமான போக்குவரத்து விதிமீறல்களுக்கு வழங்கப்படும் ப்ளாக் பீயிண்ட்கள் சில சந்தர்ப்பங்களில் டிரைவிங் லைசென்ஸை இடைநிறுத்தம் செய்யவோ அல்லது பறிமுதல் செய்யவோ வழிவகுக்கும். எனவே, உங்கள் உரிமத்தில் உள்ள பிளாக் பாயின்ட்களின் எண்ணிக்கையை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும். அதை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதைப் பின்வருமாறு பார்க்கலாம்.
துபாய் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள்:
>> உங்கள் மொபைலில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ‘Dubai Police’ செயலியைப் பதிவிறக்கி, உங்களின் UAE பாஸைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
>> உங்கள் UAE பாஸைப் பயன்படுத்தி உள்நுழைந்ததும், திரையின் மேல் வலது மூலையில் உங்கள் சுயவிவரப் படத்தைப் (profile picture) பார்க்க முடியும்.
>> படத்தின் மீது கிளிக் செய்தால், ‘Personal’ மற்றும் ‘traffic’ இடையே மாறுவதற்கான விருப்பத்துடன் உங்கள் தனிப்பட்ட டாஷ்போர்டைக் காண்பீர்கள்.
>> அதில் ‘traffic’ என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் கோப்பில் உள்ள மொத்த டிக்கெட்டுகளின் எண்ணிக்கை, அதில் உள்ள ப்ளாக் பாயின்ட்களின் எண்ணிக்கை மற்றும் நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த அபராதத் தொகை உள்ளிட்ட உங்கள் டிராஃபிக் கோப்பின் சுருக்கத்தைக் காண்பீர்கள்.
இதற்கு மாற்றாக, நீங்கள் 901 என்ற துபாய் காவல்துறையின் அவசரமற்ற ஹாட்லைனை அழைப்பதன் மூலமும் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு, பின்வரும் படிகளைப் பின்பற்ற வேண்டும்.
- போக்குவரத்து சேவைகளுக்கு 2ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- பிறகு, ப்ளாக் பாயின்ட்களைப் பற்றி விசாரிக்க 4 ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் ஓட்டுநர் உரிம எண்ணை உள்ளிடவும்.
- உரிமத்தில் எத்தனை ப்ளாக் பாயின்ட்கள் உள்ளன என்பது திரையில் தோன்றும்.
அபுதாபி டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள்:
>> உங்கள் மொபைலில் ‘Tamm’ செயலியைப் பதிவிறக்கி, உங்களின் UAE பாஸைப் பயன்படுத்தி உள்நுழையவும். திரையின் அடிப்பகுதியில் உள்ள மெனுவிலிருந்து ‘My Tamm’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
>> ‘My vehicles’ விட்ஜெட்டைக் காணும் வரை கீழே ஸ்க்ரோல் செய்யவும். பின்னர் ‘dashboard’ பிரிவின் கீழ் சில விட்ஜெட்களைக் காண்பீர்கள். இடதுபுறமாக ஸ்வைப் செய்தால், ‘Black points’ விட்ஜெட்டைக் காண்பீர்கள், அதில் உங்கள் கோப்பில் உள்ள ப்ளாக் பாயின்ட்களின் எண்ணிக்கையைக் காண முடியும்.
பிற எமிரேட்களின் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள்:
- அமீரகத்தின் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஸ்மார்ட் செயலியான ‘MOI UAE’ஐப் பதிவிறக்கவும்.
- உங்கள் UAE பாஸ் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- முகப்புத் திரையில் உங்கள் ட்ராஃபிக் கோப்பின் சுருக்கத்தை வழங்கும் விட்ஜெட்டைக் காண்பீர்கள், அதில் உங்கள் கோப்பில் உள்ள மொத்த ப்ளாக் பாயின்ட்களின் எண்ணிக்கையைக் காணலாம்.
அமீரகத்தில் ஒருவர் பெறக்கூடிய அதிகபட்ச ப்ளாக் பாயின்ட் எவ்வளவு?
அமீரகத்தில் ஒரு ஓட்டுநருக்கு 24 பிளாக் பாயின்ட்கள் கிடைத்த பிறகு விதிமீறல் இருந்தால், வழக்கு நீதிமன்றத்தால் முடிவு செய்யப்படும். பின்னர் உரிமம் பறிமுதல் செய்யப்படலாம் அல்லது இடைநீக்கம் செய்யப்படலாம். மீறப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு உங்கள் உரிமத்தின் பிளாக் பாயின்ட்கள் காலாவதியாகிவிடும்.
பிளாக் பாயின்ட்களை குறைக்க முடியுமா?
துபாய் மற்றும் அபுதாபி காவல்துறை வழங்கும் போக்குவரத்து பயிற்சி வகுப்பில் நீங்கள் கலந்து கொள்வதன் மூலம், உங்கள் கோப்பில் இருந்து எட்டு பிளாக் பாயின்ட்களை அகற்ற முடியும். வகுப்புகள் இலவசம் மற்றும் இது ஒவ்வொரு எமிரேட்டில் உள்ள போக்குவரத்து துறை கிளைகளில் நடத்தப்படுகின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel