ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் இரு வாரங்களில் ஈத் அல் அதா பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. மேலும் இந்த ஆண்டு ஈத் அல் அதாவிற்கு 4 முதல் 5 நாட்கள் வரை பொது விடுமுறையையும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அனுபவிக்கவுள்ளனர். எனவே அமீரகத்தில் தற்போது அதிகரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அமீரக குடியிருப்பாளர்கள் இந்த விடுமுறையில் வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
அவ்வாறு குறுகிய கால விடுமுறையாக குளிர் பிரதேசங்களுக்கோ அல்லது சொந்த நாட்டிற்கோ பயணம் செய்பவர்களுக்கு வசதியாக, அபுதாபியின் சையத் சர்வதேச விமான நிலையம் அமீரக குடியிருப்பாளர்களுக்கு அதன் விமான நிலைய பாரக்கிங் கட்டணத்தில் கோடை கால சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இது குறித்து சையத் சர்வதேச விமான நிலையம் இன்று சனிக்கிழமை (ஜூன் 1) வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடை காலத்தை முன்னிட்டு விமான நிலையத்தின் (AUH) முழுமையாக மூடப்பட்ட பார்க்கிங் பகுதியில் சில நாட்களுக்கு தங்கள் கார்களை விட்டுச் செல்பவர்களுக்கு தள்ளுபடி விலைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
அதன்படி, விமான நிலைய பார்க்கிங்கில் 2 முதல் 3 நாட்கள் வரை வாகனங்களை நிறுத்துவதற்கு 225 திர்ஹம்ஸ் எனவும், 4 முதல் 7 நாட்கள் வரை வாகனங்களை நிறுத்துவதற்கு 325 திர்ஹம்ஸ் எனவும், அதேபோன்று 8 முதல் 14 நாட்கள் வரை வாகனங்களை நிறுத்துவதற்கு 400 திர்ஹம்ஸ் கட்டணம் எனவும் சையத் விமான நிலையம் (AUH) அறிவித்துள்ளது.
மேலும் இந்த பார்க்கிங் பகுதியானது விமான நிலையத்தின் புறப்படும் முனையத்திற்கு (departure terminal) இரண்டு நிமிட தூரத்தில் உள்ளது. அத்துடன் இந்த பார்க்கிங் இடங்களில் ஸ்லாட்டுகளை பெறுவதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் சையத் விமான நிலையம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel