துபாயில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு 25-ஃபில் கட்டணத்தை விதிக்குமாறு விற்பனை கடைகளுக்கு துபாய் அரசாங்கம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து துபாயில் இம்மாதம் ஜூன் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அந்த தடை தற்போது துபாய் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இந்த தடை அமலுக்கு வந்ததையொட்டி, மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் முழுவதும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கைகளில் பொருட்களை எடுத்துச் சென்றும், தள்ளுவண்டிகள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளில் மளிகைப் பொருட்களை வாங்கியும் வருகின்றனர்.
இதனால், வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த மறுமுறை பயன்படுத்தக்கூடிய பைகளைக் கொண்டு வருமாறு விற்பனை கடைகளால் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நடைமுறையானது பொருட்களை வாங்குபவர்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும் நிலையாக இருந்தபோதிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சில சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வாங்கிய பொருட்களை கொண்டு செல்ல மாற்று வழிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அதாவது சில சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்த பைகளுக்கு மாற்றாக துணி மற்றும் காகித பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளன.
இது குறித்து துபாயில் உள்ள அல் மயா குழுமத்தின் குழு இயக்குநரும் பங்குதாரருமான கமல் வச்சானி பேசும் போது, “ஜூன் 1 முதல் அல் மயா சூப்பர் மார்க்கெட் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பைகள் பயன்படுத்தப்படாது. முதல் கட்டமாக, ஒருமுறை பயன்படுத்தும் பாலிபேக்குகளிலிருந்து காகிதப் பைகளை நோக்கி மாறுவோம். இந்த பைகள் இரண்டு அளவுகளில் கிடைக்கும், அதற்கான கட்டணம் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
அதே போல் அமீரகத்தில் பிரபலமான யூனியன் கோ-ஆப் சூப்பர் மார்க்கெட் குழுவானது அதன் சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து ஒருமுறை பயன்படுத்தக்கூடிய அனைத்து பைகளையும் தடை செய்துள்ளதாகவும், ஏற்கனவே குறைந்த விலையில் பல பயன்பாட்டு துணி பைகள் மற்றும் பிற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேசமயம், வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த பைகளை கொண்டு வர ஊக்குவிக்கும் வகையில் விரைவில் சலுகைகளை வழங்க உள்ளதாகவும் யூனியன் கோ-ஆப் தெரிவித்துள்ளது.
துபாயைப் போன்றே அமீரகத்தில் உள்ள மற்ற எமிரேட்டுகளான அபுதாபி மற்றும் அஜ்மான் ஆகிய எமிரேட்டுகளிலும் இந்த ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு இம்மாதம் ஜூன் 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel