ADVERTISEMENT

அபுதாபியில் கடந்த 12 ஆண்டுகளில் 83% உயர்ந்த மக்கள்தொகை.. 67% ஐ ஆக்கிரமித்த ஆண்கள்.. புள்ளி விபரங்களை வெளியிட்ட SCAD..!!

Published: 13 Jun 2024, 8:34 AM |
Updated: 13 Jun 2024, 8:38 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அமீரகத்தின் தலைநகரான அபுதாபியிலும் அதன் வெளிப்பாடு காணப்படுகிறது. அமீரகத்தைப் பொறுத்தவரை அதிகளவு மக்கள்தொகை கொண்ட எமிரேட்டாக துபாய் இருக்கின்றபோதிலும் அதற்கடுத்தபடியாக குடிமக்கள், வெளிநாட்டவர்கள் என அதிகளவு மக்கள் தொகை கொண்ட இரண்டாவது எமிரேட்டாக அபுதாபி திகழ்கிறது.

ADVERTISEMENT

அதாவது அபுதாபியில் இதற்கு முந்தைய வருடங்களைக் காட்டிலும் சமீபத்திய புள்ளிவிபரங்களில் அபுதாபியின் மக்கள்தொகை அதிகரித்துக் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதன்படி கடந்த ஆண்டு அபுதாபியின் மக்கள்தொகையானது 3,789,860 பேரை எட்டியுள்ளது. இது 2011 உடன் ஒப்பிடும்போது 83 சதவீதம் அதிகரிப்பை குறிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், எமிரேட்டில் உள்ள மக்கள்தொகையின் சராசரி வயது 33 ஆண்டுகள் என்பதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

‘Abu Dhabi Census 2023’ கணக்கெடுப்பில் வெளியான முதன்மை முடிவுகளின் படி, எமிரேட்டில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை 2,541,465 (25.41 லட்சம்) பேரை எட்டியுள்ளது, இது மொத்த மக்கள்தொகையில் 67 சதவீதமாகும். அதே நேரத்தில் மொத்த பெண்களின் எண்ணிக்கை 1,248,395 (12.48 லட்சம்) பேரை எட்டியுள்ளது, இது எமிரேட்டின் மொத்த மக்கள்தொகையில் 33 சதவீதமாகும்.

ADVERTISEMENT

மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து வெளியிடப்பட்ட தரவுகளின்படி, அபுதாபி பிராந்தியம், அல் அய்ன் பிராந்தியம் மற்றும் அல் தஃப்ரா பிராந்தியம் என மூன்று பிராந்தியங்களை உள்ளடக்கிய அபுதாபி எமிரேட்டில் 2,495,925 (24.95 லட்சம்) பேர் அபுதாபி பிராந்தியத்தில் வசிப்பது தெரியவந்துள்ளது. அதாவது அபுதாபி எமிரேட்டின் மொத்த மக்கள்தொகையில் 66 சதவீதம் பேர் அபுதாபி பிராந்தியத்தில் வசிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து அபுதாபி எமிரேட்டின் மொத்த மக்கள்தொகையில் 27 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 1,009,735 (10.09 லட்சம்) பேர் அல் அய்ன் பிராந்தியத்திலும், மொத்த மக்கள்தொகையில் 7 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 284,205 (2.84 லட்சம்) பேர் அல் தஃப்ரா பிராந்தியத்திலும் வசிப்பதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

ADVERTISEMENT

இது தவிர, அபுதாபியில் 2011 ஆம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கையானது தற்போது 82 சதவிகிதம் அதிகரிப்பை கண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, மொத்த மக்கள்தொகையில் 2,522,390 (25.22 லட்சம்) பேர் வேலைவாய்ப்பு பெற்றவர்களாக உள்ளனர். இது வணிகம், முதலீடு மற்றும் திறமைகளுக்கான விருப்பமான இடமாக அபுதாபியின் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது.

அத்துடன், பணியமர்த்தப்பட்ட பணியாளர்களில், 46 சதவீதம் பேர் வெள்ளைக் காலர் தொழிலாளர்களாகவும், 54 சதவீதம் பேர் புளூ காலர் தொழிலாளர்களாகவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளன. இதில் கடந்த 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெள்ளைக் காலர் தொழிலாளர்கள் எண்ணிக்கை தற்போது 109 சதவீதம் அதிகரித்திருப்பதும், அதே போன்று புளூ காலர் தொழிலாளர்கள் எண்ணிக்கை தற்போது 65 சதவீதம் அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு குறித்து அபுதாபியின் (SCAD-Statistics Centre Abu Dhabi) புள்ளியியல் மையத்தின் செயல் இயக்குநர் ஜெனரல் அப்துல்லா கரிப் அல்கெம்ஸி பேசும் போது, SCAD ஆனது மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியீடுகளின் தரம் மற்றும் விரிவான தன்மையை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளதாகவும், எமிரேட்டில் உள்ள புள்ளியியல் பணிகளின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து ஒழுங்கமைப்பதன் மூலம் ஒருங்கிணைந்த மற்றும் மேம்பட்ட புள்ளியியல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel