ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை கொண்டாடப்படவுள்ள இஸ்லாமியப் பண்டிகைத் திருநாளான ஈத் அல் அதாவிற்கு, அமீரக அரசு நான்கு நாள் விடுமுறையை அறிவித்துள்ளது. தியாகத்தை போற்றும் திருநாளாக அறியப்படும் ஈத் அல் அதாவானது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் முக்கியமான இஸ்லாமிய பண்டிகைகளில் ஒன்றாகும்.
பிரார்த்தனை, பிரதிபலிப்பு மற்றும் தொண்டு நேரம், இறை நம்பிக்கை போன்றவற்றை போற்றும் இந்த நாளில் முஸ்லிம்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவதும் வழக்கமாகும். அந்த வகையில் அமீரகக் குடியிருப்பாளர்கள் இந்தாண்டு ஈத் அல் அதாவிற்கு ஜூன் 15 சனிக்கிழமை முதல் ஜூன் 18 செவ்வாய் வரை நான்கு நாள் வார இறுதியை அனுபவிக்க உள்ளனர்.
மேலும் இந்த பண்டிகையை முன்னிட்டு அமீரகம் முழுவதும் சிறப்பு வானவேடிக்கைகளும் நடைபெறும். எனவே இந்த விடுமுறை நாட்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்குள்ளேயே உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிட நினைத்தால், எமிரேட்டில் உள்ள சில பிரபலமான இடங்களில் வரிசையாக நடைபெறவிருக்கும் இந்த கண்கவர் பட்டாசு நிகழ்ச்சிகளைத் தவறவிடாதீர்கள்.
அமீரகத்தில் துபாய் மற்றும் அபுதாபியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், இரு எமிரேட்களிலும் எந்த தேதி, நேரம் மற்றும் இடங்களில் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது பற்றிய முழு விபரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
துபாய்
துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் (DPR) க்கு வருபவர்கள் பிரமாதமான வானவேடிக்கைக் காட்சியை அனுபவிக்கலாம். ஆனால் தளத்தின் தீம் பார்க் ஒன்றில் நுழைய 295 திர்ஹம்ஸ் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீங்கள் அங்கு செல்ல வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, DPRன் நான்கு தீம் பூங்காக்களை இணைக்கும் பகுதியான ரிவர்லேண்ட் துபாய்க்கு செல்வதன் மூலம் மலிவான விலையில் வானவேடிக்கைகளை காட்சிகளை கண்டுகளிக்கலாம்.
- இடம்: துபாய் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்ஸில் ரிவர்லேண்ட் துபாய்
- தேதி: ஜூன் 16 மற்றும் 17
- நேரம்: இரவு 9 மணி
நுழைவுச் சீட்டு: வானவேடிக்கைக் காட்சி இலவசம் என்றாலும், ரிவர்லேண்டிற்கான நுழைவுச் சீட்டுகளுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். கவுண்டரில் வாங்கும்போது ஒரு டிக்கெட்டின் விலை 20 திர்ஹம், ஆனால் அந்தத் தொகையை உணவு மற்றும் பானங்கள் வாங்கப் பயன்படுத்தலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது, டிக்கெட்டின் விலை 15 திர்ஹம் மட்டுமே.
அபுதாபி
அபுதாபியில் வசிப்பவர்களும் அல்லது அங்கு செல்ல திட்டமிட்டிருப்பவர்களும் பின்வரும் இடங்களில் வானவேடிக்கை நிகழ்ச்சிகளை அனுபவிக்கலாம். வெளியான தகவல்களின் படி, அபுதாபியில் உள்ள இந்த இடங்களில் ஐந்து நிமிட வானவேடிக்கை நிகழ்ச்சியின் மூலம் இரவு வானம் அலங்கரிக்கப்படும்:
- அபுதாபி கார்னிச்: ஜூன் 16ம் தேதி, இரவு 9 மணிக்கு
- அல் அய்னில் உள்ள ஹஸ்ஸா பின் சையத் ஸ்டேடியம்: ஜூன் 16ம் தேதி, இரவு 9 மணிக்கு
- அல் தஃப்ராவில் உள்ள பொதுப் பூங்கா: ஜூன் 16ம் தேதி, இரவு 9 மணிக்கு
- மதீனத் சையத்: ஜூன் 16ம் தேதி, இரவு 9 மணிக்கு
- அல் மிர்ஃபா: ஜூன் 16ம் தேதி, இரவு 9 மணிக்கு
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel