ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை காலத்தை முன்னிட்டு வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டும் இருக்கின்றது. அதன் எதிரொலியாக இன்றும் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இன்று (ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை ஒரு சில இடங்களில் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பகல் நேரத்தில், நாடு முழுவதும் மணல் மற்றும் தூசி நிறைந்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சில நேரங்களில் அமீரகத்தின் உட்புற பகுதிகளில் வெப்பநிலை 49ºC வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் திங்கள்கிழமை காலை கிழக்கு கடற்கரையில் குறைந்தளவில் மேகங்கள் தோன்றும் என்றும், மேலும் வெப்பச்சலன மேகங்களால் பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விடுமுறை காலம் என்றால் அமீரகவாசிகள் பலரும் வெளியே செல்வதற்கு பெரிதும் ஆர்வம் காட்டுவர். ஆனால் தற்பொழுது நிலவி வரும் வெயிலின் கொடுமையால் வெளியே செல்லவே பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். ஒரு சிலர் இந்த விடுமுறை நாட்களின் போது அமீரகத்தில் நிலவும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சொந்த ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel