உலகெங்கிலும் இருந்து அதிகளவிலான மில்லியனர்களை ஆண்டுதோரும் ஈர்த்து வரும் ஐக்கிய அரபு அமீரகம், இந்த ஆண்டு 6,700 க்கும் மேற்பட்ட மில்லியனர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், அதிக நிகர மதிப்புள்ள நபர்களை அதிகளவில் ஈர்ப்பதில் அனைத்து நாடுகளிலும் UAE முதலிடத்தில் உள்ளதாகவும் ஹென்லி மற்றும் பார்ட்னர்ஸ் வெளியிட்ட ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் ரிப்போர்ட் 2024இன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியா, பரந்த மத்திய கிழக்கு பிராந்தியம், ரஷ்யா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தொடர்ந்து அதிக மில்லியனர்கள் வருவதாகவும், கூடவே பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் வருவதால், UAE அமெரிக்காவை விட இரண்டு மடங்கு அதிகமான மில்லியனர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஹென்லி மற்றும் பார்ட்னர்ஸ் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தில் நடைமுறையில் உள்ள பூஜ்ஜிய வருமான வரி, கோல்டன் விசா, சொகுசு வாழ்க்கை முறை மற்றும் எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைதுபாய் போன்ற உள்ளூர் விமான நிறுவனங்களின் எளிதான இணைப்பு ஆகியவற்றால் ஐரோப்பாவில் இருந்து பெரும்பாலான கோடீஸ்வரர்கள் துபாயை நோக்கி படையெடுப்பதாகக் கூறப்படுகிறது.
உலக அளவில் 14வது இடத்தில் உள்ள அமீரகம் சுமார் 116,500 மில்லியனர்கள், 308 சென்டிமில்லியனர்கள் மற்றும் 20 பில்லியனர்களுக்கு புகலிடமாக விளங்குகிறது. மேலும், UAE செல்வந்தர்களுக்கு அவர்களின் செல்வத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பல புதுமையான தீர்வுகளை வழங்கக் கூடிய ஒரு வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, துபாயின் ரியல் எஸ்டேட் சந்தையில் வலுவான ஆதாயங்களால் ஏராளமான பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவதாகவும், குறிப்பாக, இங்கிலாந்து மற்றும் பிற மேற்கத்திய நாடுகளில் உள்ள அதிக வரிகள் காரணமாக பெரும்பாலான கோடீஸ்வரர்கள் UAE போன்ற தனிநபர் வரி இல்லா நாடுகளுக்கு இழுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஹென்லி மற்றும் பார்ட்னர்ஸின் தனியார் வாடிக்கையாளர்களின் குழுத் தலைவர் டொமினிக் வோலெக் பேசும் போது, UAE உலகின் முதன்மையான செல்வச் சொர்க்கமாக மாறுவதற்கான அதன் பார்வையுடன், கோடீஸ்வரர்களை ஈர்ப்பதற்காக, கவர்ச்சிகரமான கோல்டன் விசா வழங்குதல் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையிலிருந்து ஒரு மூலோபாய இடத்தில் வணிக-நட்பு சூழல் வரை அனைத்து வசதிகளையும் அறிமுகப்படுத்துவதாக கூறியுள்ளார்.
குறிப்பாக, இந்தியா மற்றும் UAE ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரங்களும் நீண்டகாலமாக நெருங்கிய உறவை அனுபவித்து வருவதால், அமீரகம் இந்திய கோடீஸ்வரர்களிடம் சக்திவாய்ந்த ஈர்ப்பைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தைப் போலவே, அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, கிரீஸ், போர்ச்சுகல் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்களைப் பெறும் மற்ற நாடுகளாகும்.
அதேசமயம், சீனா, இங்கிலாந்து, இந்தியா, தென் கொரியா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, தைவான், நைஜீரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் 2024 ஆம் ஆண்டில் கோடீஸ்வரர்களின் நிகர வெளியேற்றம் அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, 120,000 மில்லியனர்கள் உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்ததாகவும், இந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை 128,000 ஆகவும், 2025ல் 135,000 ஆகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இது குறித்து வெளியாகியுள்ள புள்ளிவிபரங்களும் தெரிவிக்கின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel