ADVERTISEMENT

அமீரகத்தில் 49% அதிகரித்த வேலையில்லாமல் வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை.. முதலாளிகளின் கருத்து என்ன..??

Published: 26 Jun 2024, 10:47 AM |
Updated: 26 Jun 2024, 11:13 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலை தேடி பலரும் படையெடுத்து வரும் வேளையில், உலகளாவிய ஆட்சேர்ப்பு நிறுவனமான ராபர்ட் ஹாஃப் (Robert Half) வெளியிட்ட புதிய ஆய்வின்படி, அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பலர் ஏறக்குறைய பாதி பேர் (49 சதவீதம் பேர்) கையில் வேலை இல்லாமலேயே அமீரகத்திற்கு வருகை புரிகிறார்கள் என்று தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பலரும் அமீரகத்தில் வேலை வேண்டி விசிட் விசாவில் (பொதுவாக மூன்று மாத விசாவில்) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. அவற்றில் வேலை கிடைக்கும் அதிர்ஷ்டசாலிகள் வேலைவாய்ப்பு விசா பெற்று அமீரகத்தில் தொடர்ந்து தங்குகிறார்கள் என்றும், ஆனால் தங்களுக்கு உரிய வேலை கிடைக்காதவர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதையும் அல்லது குறைந்த ஊதியத்துடன் அமீரகத்தில் உள்ள வேலைகளை ஏற்றுக்கொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்கின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து தெரிவிக்கையில் “ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் சூழ்நிலை, வரி இல்லாத வருமானம் மற்றும் பன்முக கலாச்சார வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் வேலை தேடுவதற்கான நிறைய வாய்ப்புகள் உள்ளன, இது நிறைய வெளிநாட்டினரை அவர்கள் வரும்போது எளிதாக வேலை தேட முடியும் என்ற எதிர்பார்ப்பை கொடுக்கின்றது” என்று ராபர்ட் ஹாஃப் நிறுவனத்தின் மத்திய கிழக்கிற்கான இயக்குனர் கரேத் எல் மெட்டூரி தெரிவித்துள்ளார்.

இந்த உலகளாவிய ஆட்சேர்ப்பு ஆலோசனை நிறுவனம், அதிகளவு வெளிநாட்டவர்கள் வேலை தேடி விண்ணப்பிப்பதால் அமீரகத்தில் இருக்கும் முதலாளிகளுக்கு வேலைக்கு ஊழியர்களை பணியமர்த்துவது எளிதாக உள்ளது என்று கூறியுள்ளது. மேலும், பாதி நிறுவனங்கள் அதாவது 52 சதவிகித நிறுவனங்கள் 12 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது ஒரு வேலைக்கு அதிக வேலை விண்ணப்பங்களைப் பெறுவதாகக் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி ஐந்தில் இருவர் அதாவது 43 சதவிகித முதலாளிகள், வேலைக்கு ஊழியர்கள் உடனடியாகக் கிடைப்பதால், ஒரு வேலைக்கான ஆளை நிறுவனத்தில் சேர்ப்பதற்கு குறைந்த நேரத்தை எடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு முதலாளிகள் வேலையற்ற வெளிநாட்டினர் தங்களுக்கு எப்படியேனும் வேலை கிடைத்து விட வேண்டும் என நினைப்பதால் வேலை கிடைப்பதற்காக குறைந்த ஊதியத்தற்கு வேலை புரிய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவை மட்டுமல்லாமல் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டினரின் வருகையின் காரணமாக, வேலைகளுக்கான போட்டி கடுமையாக உள்ளது என்றும், மேலும் பலர் குறைந்த சம்பளத்திலேயே தொடர்ந்து பணிபுரிவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகமானது கடந்த மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் நாடு கண்ட மாபெரும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பெருமளவிலான வருகையைக் கண்டுள்ளது. இது துபாயின் மக்கள்தொகையிலும் பிரதிபலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஜனவரி 1, 2021 அன்று 3.4 மில்லியனிலிருந்து கிட்டத்தட்ட 300,000 உயர்ந்து, ஜூன் 25, 2024 அன்று 3.7 மில்லியனாக உயர்ந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு வெளிநாட்டவர்களின் வருகை முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Robert Half இன் கூற்றுப்படி, அமீரகத்தில் இருக்கக்கூடிய பணியமர்த்தல் மேலாளர்களில் சுமார் 71 சதவீதம் பேர் கடந்த 12 மாதங்களில் நிறுவனத்திற்கு தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது எளிதாகிவிட்டது என்று ஒப்புக்கொள்கிறார்கள் என்றும், இதற்குக் காரணம் கடந்த ஆண்டு அமீரகத்திற்கு வெளிநாட்டினரின் குறிப்பிடத்தக்க வருகையே காரணம் என்றும் கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் அமீரகத்தில் உள்ள முதலாளிகள், வெளிநாட்டினர் தொடர்ந்து அமீரகத்திற்கு வருவதால், பணியமர்த்தும் வேலையானது எளிதாக இருப்பதாக பலர் கூறினாலும், சிலர் தங்களுக்குத் தேவையான திறன்களுடன் திறமைகளை பணியமர்த்துவது சவாலாக இருப்பதாக கூறியுள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அதிகளவு வெளிநாட்டவர்கள் வேலை தேடி அமீரகத்திற்கு வந்த போதிலும் தற்போதைய பொருளாதாரத்தில் வெற்றிபெறத் தேவையான திறன்களைக் கண்டறிய பல நிறுவனங்கள் இன்னும் போராடி வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது மிகவும் திறமையான நபர்கள் குறிப்பாக அமீரக சந்தையில் அனுபவம் உள்ளவர்கள் அதிக சம்பளம் பெற கோருகிறார்கள் என்றும், இதனால் பல வணிக நிறுவனங்கள் புதிய ஊழியர்களை குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு எடுக்கும் விருப்பத்தைத் தேர்வு செய்கிறார்கள் என்றும் கூறப்படுகின்றது. இது தொடர்பான தரவுகளின்படி கிட்டத்தட்ட முக்கால்வாசி (72 சதவீதம்) அமீரக முதலாளிகள் அடுத்த ஆறு மாதங்களில் புதிய பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளனர் என தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel