ADVERTISEMENT

அமீரகத்தின் மதிய நேர வேலை தடையை கண்காணிக்க நேரடி ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்..!!

Published: 5 Jul 2024, 9:06 PM |
Updated: 5 Jul 2024, 9:13 PM |
Posted By: admin

அமீரகத்தில் கோடை காலத்தை முன்னிட்டு கடந்த ஜூன் 15 தொடங்கி செப்டம்பர் 15 வரை திறந்தவெளிகளில் வேலை புரியும் தொழிலாளர்களுக்கு மதிய நேர வேலை தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிறுவனங்கள் ஒழுங்காக கடைபிடிக்கின்றனவா என்பதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தொடர்ந்து 20வது ஆண்டாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த மதிய நேர வேலை தடையானது, மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தொழிலாளர்கள் நேரடி சூரிய ஒளியில் மற்றும் திறந்தவெளி பகுதிகளில் வேலை செய்வதை தடை செய்கிறது. இருப்பினும், நீர் வழங்கல் அல்லது மின்சாரம் தொடர்பான பணிகள், போக்குவரத்தை துண்டித்தல் மற்றும் அடிப்படை சேவைகளில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட சில வேலைகளுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், நிறுவனங்கள் இதற்காக அனுமதியைக் கோர வேண்டும். அத்துடன் இந்த விதியை மீறும் எந்தவொரு நிறுவனத்திற்கும் மதிய இடைவேளையின் போது பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். அதே நேரம் பல ஊழியர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும். 

ADVERTISEMENT

இந்நிலையில் தற்பொழுது அதிகாரிகள் அமீரகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு கட்டுமான தளங்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு அரசு கூறியுள்ளதன்படி போதிய இடைவேளை வழங்குகின்றனவா என ஆய்வு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தின் (MoHRE) கூற்றுப்படி, “பகல்நேர இடைவேளையின் போது தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதி பெற்றிருக்கும் நிறுவனங்கள் சூரிய ஒளியால் ஏற்படும் வெப்ப அழுத்தத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க நிறுவனங்கள் நிழலான பகுதிகளை வழங்க வேண்டும். நிறுவனங்கள் போதுமான குளிரூட்டல், நீரிழப்பைத் தடுக்க போதுமான குடிநீர், பணியிடங்களில் முதலுதவி உபகரணங்கள் மற்றும் தொழிலாளர்களின் வசதியை உறுதி செய்வதற்கான பிற வழிகளையும் வழங்க வேண்டும்” என கூறியுள்ளது.

ADVERTISEMENT

மேலும் 600590000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது அதன் இணையதளம் அல்லது ஸ்மார்ட் ஆப் மூலம் மதிய இடைவேளையில் ஏதேனும் மீறல்கள் இருந்தால் பொதுமக்கள் புகாரளிக்குமாறு MoHRE கேட்டுக் கொண்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel