ADVERTISEMENT

துபாய்: E311 சாலையில் 64 கிமீ தூரத்திற்கு ‘டிராம்’ போக்குவரத்து திட்டம்”..!! E311 ஐ உலகின் பசுமையான நெடுஞ்சாலையாக மாற்றவும் இலக்கு..!!

Published: 10 Jul 2024, 8:54 PM |
Updated: 10 Jul 2024, 8:55 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயை தளமாகக் கொண்ட நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒன்று, துபாய் எமிரேட்டில் உள்ள பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றான ஷேக் முகமது பின் சையத் சாலை (Sheikh Mohammed bin Zayed Road – E311) வழியாக செல்லும் ‘டிராம் (Tram)’ போக்குவரத்து திட்டத்திற்கான புதிய திட்டங்களை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயை சேர்ந்த URB எனும் நிறுவனமானது இந்த திட்டம் குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், புதிய டிராம் திட்டம் தற்போது திட்ட நிலையில் உள்ளதாகவும், அதிகாரிகளுக்கு இன்னும் முறையான விளக்கக்காட்சி வழங்கப்படவில்லை எனவும் கூறியுள்ளது. அத்துடன், இந்த திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு $10 பில்லியன் என்றும் இது E311 சாலையில் சுமார் 25 டிராம் நிலையங்களைக் கொண்டிருக்கும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த டிராம்கள் 300 மெகாவாட் சூரிய ஆற்றல் அமைப்பு மூலம் 100 சதவீதம் சூரிய சக்தியில் இயங்கும் என்றும், கூடவே டிராம்வே சோலார் பேனல்கள் இதன் பாதைகளில் நேரடியாக இணைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இது டிராம் நெட்வொர்க்கிற்கு நிலையான மின்சக்தியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பரந்த மேல்நிலை மின் இணைப்புகளின் தேவையை குறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், 10 ஆண்டுகளில் நான்கு கட்டங்களாக இந்த திட்டத்தை முடிக்க முடியும் என்று கூறியதுடன், இந்த திட்டம் துபாய் இண்டஸ்ட்ரியல் சிட்டியிலிருந்து முஹைஸ்னா வரை 64 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கும் எனவும் URB நிறுவனத்தின் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பகேரியன் என்பவர் தெரிவித்துள்ளார்.

கூடவே, இத்திட்டத்தின் கீழ் 64 கிமீ நடைபாதையில் 1 மில்லியன் மரங்கள் மற்றும் நகர்ப்புற பண்ணைகள் மற்றும் தோட்டங்கள் கொண்டு இந்த சாலையானது பசுமையாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை ஏற்றுக்கொள்வது என்பது மக்கள் வாகனங்களை விடவும் பசுமையான இடங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன், இந்த முன்முயற்சியானது துபாய் எமிரேட்டில் நிலையான போக்குவரத்து முறைகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் பாரம்பரிய கார் ஆதிக்கம் செலுத்தும் சாலைகளில் சமூக மண்டலங்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும், இதனால் நகர்ப்புற வாழ்க்கையின் தரத்தை இத்திட்டம் மேம்படுத்தும் என்றும் URB நிறுவனத்தின் தலைவர் பகேரியன் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel