அமீரகத்தில் ஒவ்வொரு வருடமும் ஏற்பட்ட சாலை விபத்துகள் குறித்த அறிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் கடந்த 2023 ம் ஆண்டிற்கான சாலை விபத்துகள் குறித்த விபரங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன. அதில் கடந்த 2023 இல் துபாயில் பதிவுசெய்யப்பட்ட சாலை இறப்பு விகிதம் 100,000 பேருக்கு 1.6 இறப்புகள் என்ற மிகக் குறைவானதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2022ம் ஆண்டு விகிதத்தை விட மிகவும் குறைவானதாகும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 16 வருடங்களை ஒப்பிட்டு பார்க்கையில் கடந்த வருட சாலை விபத்துகளின் இறப்பு விகிதம் அதிகளவு குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்து விபத்து இறப்பு விகிதம் 2007 மற்றும் 2023 க்கு இடையில் 93 சதவீதம் குறைந்துள்ளது என்று உயர் அதிகாரிகள் தகவலை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் பதிவான இறப்புகளின் எண்ணிக்கையை அவர்கள் குறிப்பிடவில்லை.
சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் துபாய் காவல்துறை ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தியபோது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு நிறுவனங்களும் கடந்த ஆண்டு “மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து அமலாக்க” முயற்சிகளை செயல்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துபாய் போக்குவரத்து பாதுகாப்பு உத்தியானது சாலை விபத்துக்களை பூஜ்ஜியமாகக் குறைக்கும் லட்சிய இலக்கைக் கொண்டுள்ளது.
அத்துடன் இந்த கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டில், பாதசாரிகள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் மற்றும் இ-ஸ்கூட்டர்கள் தொடர்பான 500,000 க்கும் மேற்பட்ட மீறல்களை அவர்கள் பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நடவடிக்கைகளில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படும் 29 தளங்களை ஆய்வு செய்தல் மற்றும் நிவர்த்தி செய்தல்; பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான ஸ்மார்ட் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துதல்; கூட்டு போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் அமலாக்க பிரச்சாரங்களை நடத்துதல்; மற்றும் டெலிவரி மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆய்வு பிரச்சாரங்களை தொடங்குதல் ஆகியவை அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel