ADVERTISEMENT

அமீரக தெருவிற்கு இந்தியரின் பெயரை சூட்டி கௌரவித்த அபுதாபி..!! யார் அவர்?

Published: 12 Jul 2024, 2:03 PM |
Updated: 12 Jul 2024, 6:25 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல ஆண்டுகளாக மருத்துவ துறையில் சேவை புரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த நபரின் பெயரானது தற்பொழுது அமீரக தெரு ஒன்றிற்கு வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறு தசாப்தங்களாக அமீரக சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த 84 வயதான மற்றும் அமீரக குடிமகனான டாக்டர் ஜார்ஜ் மேத்யூவின் பெயரில் அபுதாபியில் உள்ள ஒரு தெருவுக்கு தற்பொழுது பெயரிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம் ஒன்றிணைவதற்கு முன்பே, கடந்த 1967 ஆம் ஆண்டு 26 வயது இளைஞராக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த டாக்டர் மேத்யூ, அபுதாபியில் சுகாதார அமைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அத்துடன் அல் அய்னில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த முதல் மருத்துவரும் இவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது முன்னோடி பங்களிப்புகளை அங்கீகரித்து, அபுதாபியின் அல் மஃப்ராக் பகுதியில் உள்ள ஷேக் ஷக்பூத் மெடிக்கல் சிட்டி (SSMC) அருகே உள்ள சாலைக்கு ஜார்ஜ் மேத்யூ தெரு என்று பெயரிடப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நடவடிக்கையாக, நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் (DMT) ‘அமீரகத்தின் தொலைநோக்கு பார்வையாளர்களை கௌரவிப்பது: நினைவு வீதிகள் (Honouring UAE’s Visionaries: Commemorative Streets)’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயல் வருகிறது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டாக்டர் மேத்யூ அமீரகத்திற்கு முதன்முதலில் வந்தபோது, ​​​​சாலைகள் அல்லது சரியான மருத்துவ வசதிகள் இல்லை என கூறப்படுகின்றது. இது குறித்து அவர் தெரிவிக்கையில் “அந்த நேரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதாக இல்லை. தேசத்தின் தந்தை மறைந்த ஷேக் சயீத் மூலம் ஈர்க்கப்பட்டு, மக்களுக்கு உதவ நான் என்னை அர்ப்பணித்தேன். எனது முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ஆனால் முதலில் அவர் அமெரிக்காவிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். பின் குவைத் மற்றும் பஹ்ரைனில் ஆரம்ப காலத்தில் பணிபுரிந்த இவர் பின்னர் அல் அய்னின் அழகைப் பற்றி கேள்விப்பட்டு அமீரகம் வந்திருக்கிறார். அல் அய்னின் முதல் அரசு மருத்துவர் பதவிக்கான அவரது விண்ணப்பம் வெற்றியடைந்ததுடன், மறைந்த அமீரக தந்தை ஷேக் சையதின் ஆதரவுடன் முதல் கிளினிக்கை திறந்திருக்கிறார்.

பின் ஒரு பொது பயிற்சியாளராக தனது சேவையைத் தொடங்கிய டாக்டர் மேத்யூ 1972 இல் அல் அய்ன் பிராந்தியத்தின் மருத்துவ இயக்குநராகவும், 2001 இல் சுகாதார ஆணைய ஆலோசகராகவும் பல உயர் பதவிகளை வகித்திருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த டாக்டர் மேத்யூ திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கிறார். அதன்பின் திருமணத்திற்குப் பிறகு அவர் தனது மனைவி வல்சாவுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்துள்ளார். இவர்களது மகள் மரியம் (ப்ரியா) தற்பொழுது அரசுத் துறையில் பணிபுரிந்து வருகிறார். 

அமீரகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் ஷேக் சயீதின் ஆதரவுடன், டாக்டர் மேத்யூ வெப்பமண்டல நோய்களை நிர்வகிப்பதைக் கற்றுக்கொள்வதற்காக இங்கிலாந்துக்குச் சென்றிருக்கிறார். பின்னர் மருத்துவமனை நிர்வாகத்தில் சிறப்புப் படிப்புகளுக்காக ஹார்வர்டுக்குச் சென்றிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்திற்காக அறியப்பட்ட டாக்டர் மேத்யூ சுகாதாரப் பணியாளர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி அளிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

மேலும் அல் அய்ன் பிராந்தியத்தில் அபுதாபி ஆட்சியாளரின் பிரதிநிதியான மறைந்த ஷேக் தஹ்னூன் பின் முகமது அல் நஹ்யான் உட்பட அரச குடும்பத்திற்கு அவர் சேவை செய்திருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகமானது டாக்டர் மேத்யூ மற்றும் அவரது குடும்பத்திற்கு அமீரக குடியுரிமையை 2004 இல் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த 2018 இல் அபுதாபி விருதுகளையும் வென்றுள்ளார்.

தற்போது, ​​அவர் நாட்டின் மற்றொரு முன்னணி நிபுணரான டாக்டர் அப்துல் ரஹீம் ஜாபர் போன்றவர்களுடன் ஜனாதிபதி விவகாரங்களின் கீழ் தனியார் சுகாதாரத் துறையில் தொடர்ந்து பணியாற்றுகிறார். இது குறித்து அவர் கூறுகையில் “நான் வாழும் வரை நாட்டிற்காகவும் அதன் குடிமக்களுக்காகவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். கடவுள் எனக்கு அதிக காலங்கள் சேவை செய்ய வழங்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கு 100 சதவிகிதம் நேர்மையுடன் வேலை செய்யுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற அறிவுரையையும் அவர் கொடுத்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel