ADVERTISEMENT

துபாய் மாலில் பிக் பாக்கெட் அடித்த 4 ஆசாமிகள்.. நாடு கடத்த உத்தரவிட்ட நீதிமன்றம்..!!

Published: 12 Jul 2024, 7:29 PM |
Updated: 12 Jul 2024, 7:35 PM |
Posted By: admin

உலகப் புகழ்பெற்ற துபாய் மாலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான நபர்கள் வந்து செல்கின்றனர். அதுவும் வார விடுமுறை நாட்களில் மக்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இப்படி இருக்க இந்த மாலுக்கு வரும் பார்வையாளர்களை குறிவைத்து திருட்டு சம்பவங்களை நிகழ்த்தும் 4 பேர் கொண்ட பிக்பாக்கெட் கும்பல் சமீபத்தில் ரகசிய போலீஸ் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாதசாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வரும் நெரிசலான பகுதிகளில், குறிப்பாக துபாய் மால் போன்ற பிரபலமான இடங்களில் திருட்டுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து அதனை கண்காணிக்க துபாய் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறையினர் சீருடையின்றி மக்களுடன் மக்களாக கூட்டத்தினருடன் கலந்து நிலைமையை கண்காணித்துள்ளனர்.

அப்போது 23, 28, 45 மற்றும் 54 வயதுடைய நான்கு பேர் கொண்ட கும்பல் கடந்த மார்ச் 6, 2024 அன்று கையும் களவுமாக பிடிபட்டுள்ளது. இந்தத் திருட்டுகள் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டவை என்பதை நீதிமன்றப் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. சம்பவத்தன்று, கூட்டத்தின் கவனச்சிதறலைப் பயன்படுத்தி, துபாய் மாலின் வாட்டர் ஃபவுண்டைன் பகுதியை குறிவைத்து இந்த திருட்டை நிகழ்த்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

சம்பவத்தின் போது முதலில் 4 பேர் கொண்ட கும்பல் வாட்டர் ஃபவுண்டைன் நிகழ்ச்சியைப் பார்ப்பது போல் பாசாங்கு செய்து பின் ஒரு நபரை குறிவைக்கின்றனர். திருட்டு கும்பலில் உள்ள ஒருவர் அந்த நபரை கண்காணித்துக் கொண்டு இருக்கும் போது, மற்ற இருவர் அந்நபரின் கவனத்தை திசைதிருப்புகின்றனர். அப்போது நான்காவது நபர் அவரது பையில் இருந்து செல்ஃபோனை திருடி விடுகிறார். பின்னர் அவர்கள் மக்களை குழப்புவதற்காக வெவ்வேறு திசைகளில் தப்பி ஓடியுள்ளனர்.

ஆனால் காவல்துறையினர் அந்த இடத்திலேயே குற்றத்தை கண்டுபிடித்து அவர்களை உடனடியாக கைது செய்துள்ளனர். காவல்துறை அதிகாரி ஒருவர் இது பற்றி தெரிவிக்கையில் “துபாய் மால் போன்ற நெரிசலான இடங்களில் சமீபகாலமாக பிக்பாக்கெட்டுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, ரகசிய பாதுகாப்பு குழுக்கள் நிறுவப்பட்டன” என்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் “அதிகாரிகள் திருட்டு நடந்த அன்று குற்றவாளிகளை கண்காணித்து பிடித்தனர். குற்றவாளிகள் கண்காணிப்பு கேமராக்களிலும் படம்பிடிக்கப்பட்டனர்” என்றும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 3 மாதங்களாக நீதிமன்றத்தில் இருந்து வந்த வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் கண்டறிந்து, தலா ஒரு மாத சிறைத்தண்டனை விதித்ததுடன் நாடு கடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel