துபாயின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலையான ஷேக் சையத் சாலையில் (E11) சென்று கொண்டிருந்த ஒரு காரில், எதிர்பாராதவிதமாக குரூஸ் கன்ட்ரோல் எனப்படும் ‘தானியங்கி வாகன இயக்கம்’ பழுதடைந்ததை தொடர்ந்து அந்த காரின் ஓட்டுநர் துபாய் ரோந்து போலீஸால் மீட்கப்பட்ட பரபரப்பு சம்பவம் ஒன்று துபாயில் நேற்று நிகழ்ந்துள்ளது.
துபாயிலிருந்து ஷேக் சையத் சாலை வழியாக அபுதாபியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, தனது வாகனத்தின் குரூஸ் கன்ட்ரோல் செயல்படவில்லை என 999 என்ற அவசர எண்ணுக்குத் தொடர்பு கொண்டு துபாய் போலீஸிடம் உதவி கோரியுள்ளார். இந்த தகவலை பெற்ற துபாய் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அடுத்த நிமிடங்களிலேயே ரோந்து போலீஸ் அதிகாரிகளை அந்த கார் பயணிக்கும் இடத்திற்கு செல்லுமாறு கோரியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஷேக் சையத் சாலைக்கு அனுப்பப்பட்ட போக்குவரத்து ரோந்துப் பிரிவினர், எக்ஸ்போ பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தைக் கண்டுள்ளனர். அதிவேக சாலையில் செல்லும் வாகனத்தின் பெரும் ஆபத்தைக் கருத்தில் கொண்டு, ரோந்துப் படையினர் அந்த பகுதியை சுற்றியுள்ள சாலைகளை விரைவாகப் பாதுகாத்து மற்ற வாகன ஓட்டிகளுக்கும் எச்சரிக்கை பலகைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளனர்.
பின்னர், குரூஸ் கன்ட்ரோல் பழுதான அந்த காரில் சிக்கிக்கொண்ட ஓட்டுநரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய ரோந்து படையினர், தங்கிளின் ஒரு ரோந்து வாகனத்தை வேகமாக பழுதான வாகனத்தின் முன்பாக கொண்டு சென்று அந்த காரின் வேகத்திற்கு ஏற்ப இயக்கியுள்ளனர்.
அதேபோன்று, அந்த கார் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்ததால் பாதுகாப்பு கருதி அந்த பழுதான காரின் பின்பாகவும் ஒரு ரோந்து வாகனத்தை பின் தொடரச் செய்து, பின்னர் முன் சென்ற ரோந்து காரின் பிரேக்கை மெல்ல இயக்கி பழுதான கார் ரோந்து வாகனத்தின் பின்பாக நிலைநிறுத்தப்பட்டு படிப்படியாக அந்த காரின் வேகத்தை குறைத்து அதனை முழுமையாக நிறுத்தியுள்ளனர்.
சினிமாவை மிஞ்சும் வகையில் செயல்பட்ட துபாய் காவல்துறையினரின் இந்த துரித நடவடிக்கையால், கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனத்தில் பயணித்த ஓட்டுநர் எவ்வித காயமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். துபாயின் மிகவும் பிஸியான 140 கி.மீ வேகம் வரையில் செல்லக்கூடிய ஷேக் சையத் சாலையில் இச்சம்பவம் நடந்ததால், இது வாகன ஓட்டுநர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், குரூஸ் கன்ட்ரோல் மூலம் வாகனத்தை ஓட்டுபவர்கள் கவனமாக இருக்கவும், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வாகனத்தை இயக்குவதற்கு முன்பு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் துபாய் காவல்துறையினர் வாகன ஓட்டுநர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel