துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சராக இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய கேபினட் அமைச்சரவையில் தற்போது ஷேக் ஹம்தானும் இணைந்துள்ளார்.
இது தவிர, ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமராகவும் பணியாற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள், மத்திய அரசில் பெரும் மாற்றங்களை அறிவித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பானது இன்று வெளியிடப்பட்டுள்ளது.
“ஷேக் ஹம்தான் தனது மக்களை நேசிக்கும் ஒரு தலைவர் மற்றும் அவரது மக்கள் அவரை மிகவும் நேசிக்கிறார்கள். அவர் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்திற்கு ஒரு சிறந்த கூடுதல் பலமாகவும், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெரும் பங்களிப்பாளராகவும் இருப்பார் என்பதில் எங்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை உள்ளது” என்று ஷேக் முகமது அவர்கள் இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு மந்திரியாக பதவி வகித்து வரும் ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நஹ்யான் அவர்களும் அமீரகத்தின் மற்றொரு துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். மனித வளம் மற்றும் குடியேற்ற அமைச்சராக இருக்கும் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் அவார், கூடவே உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சராகவும் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பொதுக் கல்வி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான மாநில அமைச்சராக இருந்து வந்த சாரா அல் அமிரி, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சராக இருந்த அகமது பெல்ஹோல், இனி விளையாட்டுத்துறை அமைச்சராகப் பணியாற்றுவார் என ஷேக் முகமது தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக அலியா அப்துல்லா அல் மஸ்ரூயி தொழில் முனைவோர் துறை அமைச்சராக தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தனியார் மற்றும் அரசு துறைகளில் சிறப்பான அனுபவம் உள்ளதால், எமிராட்டியர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கு அவர் மிகவும் பங்களிப்பார் எனவும் ஷேக் முகமது கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel