அமீரகத்தில் இருந்து தங்களின் சொந்த ஊர் அல்லது வேறு நாடுகளுக்கு பயணம் செய்யவிருக்கும் கார் வைத்திருக்கும் நபர்கள் துபாய் முனிசிபாலிட்டி விடுத்துள்ள எச்சரிக்கையின் படி நடப்பதன் மூலம் அவர்களின் கார்கள் தொடர்பாக 500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படுவதை தவிர்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்கள் நீண்ட நாட்கள் அமீரகத்தை விட்டு செல்லவிருந்தால் தங்கள் கார்களை அழுக்காக விட்டுவிடுவதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை குடிமக்கள் அமைப்பு மக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவில், எமிரேட்டின் தூய்மையான தோற்றத்தைப் பாதுகாப்பதற்காக குடியிருப்பாளர்கள் பயணிக்கும் முன், தங்கள் வாகனங்களை தவறாமல் சுத்தம் செய்யுமாறு முனிசிபாலிட்டி வலியுறுத்தியுள்ளது. மேலும் “சரியான பார்க்கிங்கை உறுதிப்படுத்தவும், பொது இடங்களில் வாகனங்களை விடுவதைத் தவிர்க்கவும்” கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவோ அல்லது துப்புரவுப் பணிகளுக்கு இடையூறாகவோ தங்கள் வாகனங்களை விட்டுச்செல்ல வேண்டாம் என்றும் குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். துபாய் கழிவு மேலாண்மைத் துறையின் ‘எனது வாகனம்’ பிரச்சாரத்தின் கீழ், முனிசிபாலிட்டியால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தங்கள் வாகனங்களை சுத்தம் செய்யாவிட்டால், அழுக்காக விடப்பட்ட கார்களின் உரிமையாளர்களுக்கு 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், வாகனப் பதிவு மற்றும் சோதனை மையங்களில் இது போன்று அழுக்காக கைவிடப்பட்ட கார்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்பட்டதில் ஒன்பது மையங்களில் கைவிடப்பட்ட வாகனங்களுக்கு 120க்கும் மேற்பட்ட எச்சரிக்கைகள் விடப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மீறலை புரிந்தால் அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதம் செலுத்தாவிட்டால், காரை பறிமுதல் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் ஆறு மாதங்களாக முனிசிபாலிட்டி வைத்திருக்கும் என்றும் இந்த நேரத்தில் காரை உரிமையாளர்கள் கோரினால், முனிசிபாலிட்டி அபராதம், சேமிப்பு கட்டணம் உட்பட 1,381 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கார் ஆறு மாதங்களுக்குள் உரிமை கோரப்படாவிட்டால், அது ஏலம் விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel