உலகமெங்கும் பல்வேறு நாட்டினர் சுற்றுலாவிற்கு விரும்பி செல்லக்கூடிய இடங்களில் முதன்மையானதாக துபாய் தற்பொழுது உள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ள சமீபத்திய ஆண்டுகளாக துபாய் அரசானது பல்வேறு உத்திகளையும் கையாண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக புதிதாக பேருந்து சேவை ஒன்று இயக்கப்படவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் புதிதாக ஒரு சுற்றுலா பேருந்து சேவையை தொடங்குவதாக தற்பொழுது அறிவித்துள்ளது. இது எமிரேட்டின் முக்கிய பகுதிகளை அதன் நிறுத்தங்களாகக் கணக்கிட்டு பேருந்து சேவை இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
செப்டம்பரில் தொடங்கப்படும் இந்த, ‘ஆன் & ஆஃப்’ பேருந்து சேவையானது (on & off bus service), சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் துபாயின் சுற்றுலாத் தலங்களைக் கண்டறிய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற துபாய் மாலில் தொடங்கி, துபாய் ஃபிரேம், ஹெரிடேஜ் வில்லேஜ், மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர், கோல்ட் சூக், துபாய் மால், லா மெர் பீச், ஜுமேரா மசூதி மற்றும் சிட்டி வாக் ஆகிய எட்டு முக்கிய இடங்கள் மற்றும் அடையாளங்களை பயணிகள் இந்த பேருந்து சேவையின் மூலம் பார்வையிடலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த பேருந்து சேவையானது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என்றும், துபாய் மாலில் இருந்து ஒவ்வொரு 60 நிமிடங்களுக்கும் இந்த பேருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் ஒரு முழுபயணத்திற்கும் இரண்டு மணிநேரம் ஆகும் என கூறப்படுகின்ற நிலையில் ஒரு நபருக்கு நாள் முழுவதும் செல்லுபடியாகும் கட்டணம் 35 திர்ஹம்ஸ் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப் போக்குவரத்து ஏஜென்சியின் CEO அகமது பஹ்ரோசியன் கூறுகையில் “துபாய் ஆன் & ஆஃப் பஸ் முக்கிய பகுதிகளை பார்வையிட உதவுவதுடன் மெட்ரோ, கடல் போக்குவரத்து மற்றும் பொதுப் பேருந்துகள் குறிப்பாக அல் குபைபா நிலையம் போன்ற பிற பொதுப் போக்குவரத்துடன் இணைக்கிறது” என்று கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel