ADVERTISEMENT

துபாயில் விஸ்வரூபம் எடுக்கும் பொது போக்குவரத்து..!! வெரும் 6 மாதங்களில் 361 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி சாதனை..!! துபாய் மெட்ரோ முதலிடம்..!!

Published: 11 Aug 2024, 2:29 PM |
Updated: 11 Aug 2024, 2:39 PM |
Posted By: admin

துபாயின் பொது போக்குவரத்து வசதியில் துபாய் மெட்ரோவானது துபாய் பயணிகளின் முதன்மையான தேர்வாக இருந்தது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பில் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மொத்தப் பயணிகளில் 37 சதவிகிதம் பேர் துபாய் மெட்ரோவை பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்துப் பயணிகளின் எண்ணிக்கை 361.2 மில்லியனாக இருந்தது எனவும் தகவல் கூறப்பட்டுள்ளது. இது 2023-ம் ஆண்டின் காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 6 சதவிகிதம் அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) மெட்ரோ, டிராம், பொது பேருந்துகள், கடல் போக்குவரத்து, டாக்சிகள், இ-ஹெய்ல் வாகனங்கள், ஸ்மார்ட் வாடகை வாகனங்கள், மற்றும் ஆன்-டிமாண்ட் பேருந்துகள் ஆகிய பொது போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுள்ளது. இந்த போக்குவரத்தை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கையானது ஆண்டின் முதல் பாதியில் தினசரி சராசரியாக 1.98 மில்லியனை எட்டியது என்றும், இது 2023-ல் இதே காலகட்டத்தில் 1.88 மில்லியனாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

RTA-வின் இயக்குநர் ஜெனரலும், நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டர் அல் தயர் கூறியதாவது: “துபாய் மெட்ரோ மற்றும் டாக்சிகள் பொதுப் போக்குவரத்து பயணங்களில் அதிக பங்கைக் கொண்டுள்ளன. அதாவது மெட்ரோவுக்கு 37 சதவீதம் மற்றும் டாக்சிகளுக்கு 27 சதவீதம். பொதுப் பேருந்துகள் 24.5 சதவீதம் பயணிகளைக் கையாண்டுள்ளன. ஜனவரி 2024 இல் அதிகபட்சமாக 65 மில்லியன் பயனர்கள் பொது போக்ககுவரத்தை பயன்படுத்தி உள்ளனர், மீதமுள்ள மாதங்களில் 53 முதல் 63 மில்லியன் என பயணிகளின் எண்ணிக்கை இருந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

பரபரப்பான மெட்ரோ நிலையங்கள்

துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் கிரீன் பாதைகள் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 133 மில்லியன் பயணிகளைக் கொண்டு சென்றன என கூறப்பட்டுள்ளது. அதிலும் BurJuman மற்றும் Union நிலையங்கள் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கண்டன என்றும், புர்ஜூமன் 7.8 மில்லியன் பயனர்களைப் பதிவுசெய்தது மற்றும் யூனியன் 6.3 மில்லியன் பயணிகளைப் பதிவு செய்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது பற்றி தெரிவிக்கையில் “ரெட் லைனில், அல் ரிக்கா ஸ்டேஷன் 6.2 மில்லியன் பயணிகளுடன் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து மால் ஆஃப் தி எமிரேட்ஸ் 5.6 மில்லியன் மற்றும் பிசினஸ் பே 5.2 மில்லியனுடன் உள்ளது. கிரீன் லைனில், ஷரஃப் டிஜி நிலையம் 4.7 மில்லியன் பயனர்களுடன் முதலிடத்திலும், 4.1 மில்லியனுடன் பனியாஸ் நிலையம் இரண்டாவது இடத்திலும், 3.3 மில்லியன் பயனர்களுடன் ஸ்டேடியம் நிலையத்திலும் உள்ளது,” என்று அல் தயர் கூறியுள்ளார்.

பிற பொது போக்குவரத்து வழிமுறைகள்

துபாய் டிராம் ஆண்டின் முதல் பாதியில் 4.5 மில்லியன் பயணிகளைக் கையாண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பேருந்துகளில் 89.2 மில்லியன் மற்றும் கடல் போக்குவரத்து 9.7 மில்லியன் பயணிகள் பயணித்ததாக கூறப்பட்டுள்ளது.

இ-ஹெய்ல் வாகனங்கள், ஆன்-டிமாண்ட் பேருந்துகள் உட்பட shared vehicles 27.8 மில்லியன் பயணிகளைக் கையாண்டது என்றும் துபாயில் உள்ள டாக்சிகள் இந்த ஆண்டின் முதல் பாதியில் 97 மில்லியன் பயணிகளை கையாண்டன என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தின் செயல்திறனை அதிகரிக்க போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளில் RTA கவனம் செலுத்துகிறது மற்றும் தனியார் வாகனங்கள் மீதான நம்பிக்கையை குறைக்கவும், பொது மற்றும் பகிரப்பட்ட போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவும் பொதுமக்களை ஊக்குவிக்கும் கொள்கைகளை செயல்படுத்துகிறது” என்று RTA தலைவர் மேலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel