ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமையன்று கொர்ஃபக்கான் நகரின் நுழைவாயிலில் அமைந்துள்ள வாடி விஷி சதுக்கத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த தொழிலாளர்களில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தற்போது தகல்வல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 73 பயணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால அதிகாரிகள், பேருந்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்து, சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகவும், காயங்களின் தன்மை லேசானது முதல் கடுமையானது வரை இருந்ததாகவும் தெரிவித்துள்னர்.
மேலும் இந்த மோசமான விபத்து குறித்து வெளிவந்திருக்கும் முதற்கட்ட தகவல்களின்படி, ஆசிய மற்றும் அரபு தேசங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களை இந்த பேருந்து ஏற்றிச் சென்றதாகவும், பேருந்தில் திடீரென பிரேக் பழுதடைந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
ஷார்ஜாவின் கிழக்கு பிராந்திய காவல் துறையின் இயக்குனர் பிரிகேடியர் டாக்டர் அல் ஹமூடி பேசுகையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதாக ஷார்ஜா காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ், சிவில் பாதுகாப்பு மற்றும் தேசிய ஆம்புலன்ஸ் குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைவாகச் சென்று இறப்பு மற்றும் காயங்களை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமார் 70 க்கும் மேற்பட்ட தொழிலார்களுடன் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் சிலர் வெறும் கீறல்கள் மற்றும் வெட்டு காயங்களுடன் தப்பிய நிலையில், மற்றவர்கள் எலும்புகள் உடைந்தும் மற்றும் கடுமையான காயங்களுடன் இருந்ததாகவும், இன்னும் சிலரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்தில் சென்றவர்கள் அனைவரும் அஜ்மானில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அவர்கள் அனைவரும் அஜ்மானுக்குச் சென்று தங்கள் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு சென்று விட்டு அந்தப் பகுதியில் உணவுப் பொருட்களை வாங்கி வர சென்றிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்ததாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டப்படி சம்பிரதாயங்கள் மற்றும் ஆவணங்கள் முடிக்கப்பட்டவுடன், இந்த விபத்தில் இறந்த அனைத்து தொழிலாளர்களின் உடல்களும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டில், துபாயின் ஷேக் முகமது பின் சையத் சாலையில் ஒரு டிரக் மீது வேன் மோதியதில் எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆறு பேர் படுகாயமடைந்தனர். அதே ஆண்டில், ஓமன்-துபாய் பேருந்து ஒன்று வாகனத்தின் பக்கவாட்டில் இருந்த சாலை உயரக் கட்டுப்பாடு தடுப்புச் சுவரில் மோதியதில் சுமார் 17 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், தற்போது நடந்த இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்திருப்பது அமீரக குடியிருப்பாளர்கள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel