ADVERTISEMENT

துபாயில் புத்தாண்டு: 1,400 இலவச பேருந்துகள், 43 மணி நேர இடைவிடாத மெட்ரோ சேவை..

Published: 24 Dec 2024, 5:45 PM |
Updated: 24 Dec 2024, 5:55 PM |
Posted By: Menaka

புத்தாண்டு கொண்டாட்டம் நெருங்கி வரும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை துபாய் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றது. அவற்றில் ஒன்றாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) தரப்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நடப்பு ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி முதல் துபாய் மெட்ரோ மற்றும் டிராம் 43 மணிநேரத்திற்கு இடைவிடாமல் இயக்கப்படும் என்று RTAவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதிகாரி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, துபாய் மெட்ரோவைப் பொறுத்தவரை, டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி இறுதி வரை அதாவது நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும். அதே போல், துபாய் டிராம் டிசம்பர் 31 ஆம் தேதி காலை 6 மணி முதல் ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை இயங்கும் என்பது தெரிய வந்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நெரிசலைத் தவிர்க்க உதவுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கொண்டாட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சுமூகமான பயணத்தை உறுதிசெய்ய பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல், சுமார் 1,400 பேருந்துகளை பொதுமக்களுக்கு இலவசமாக இயக்கவும் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து RTAவின் போக்குவரத்து நிர்வாக இயக்குநர் ஹுசைன் அல் பனா அவர்கள் பேசிய போது, நீட்டிக்கப்பட்ட மெட்ரோ மற்றும் டிராம் சேவைகள், கூடுதல் பார்க்கிங் இடங்கள் மற்றும் இலவச பேருந்து பயணங்கள் ஆகியவை பொதுமக்களுக்கு வசதியான போக்குவரத்து விருப்பங்களை வழங்குவதோடு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் துபாய் மால் மெட்ரோ நிலையம் மாலை 5 மணி முதல் அல்லது கூட்டம் அதிகமாக இருந்தால் மூடப்படும் என்றும் இதனால் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் அதற்கு அருகிலுள்ள மெட்ரோ நிலையத்தைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து தெரிவிக்கையில் “போக்குவரத்தை தவிர்க்க துபாய் மெட்ரோவை பயன்படுத்துமாறு மக்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். அனைத்து மெட்ரோ நிலையங்களும் செயல்படும், மேலும் சில ரயில் நிலையங்களில் நெரிசலைத் தவிர்க்க சிறப்பு திட்டமிடல் இருக்கும். குறிப்பிட்ட நேரங்களில், நெரிசலைத் தடுக்க புர்ஜ் கலிபா போன்ற சில நிலையங்களை மூடுவோம்” என்று அல் பனா கூறியுள்ளார்.

சாலை அடையாளங்கள்

இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பயணிகளை வழிநடத்தும் வகையில் சைன் போர்டு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது வாகனம் நிறுத்தும் இடங்கள் மற்றும் பஸ் பிக்-அப் புள்ளிகளைக் குறிக்கும் வகையில் சாலைப் பலகைகள் வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், சாலை மூடல்கள், மாற்று வழிகள் மற்றும் திறந்திருக்கும் பாதைகள் பற்றிய நிகழ்நேர தகவல்களை வழங்க நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள் (ITS) பலகைகள் மற்றும் செய்தி பலகைகள் (variable message boards) வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு பகுதிக்கு எளிதாக அணுகுவதற்கு இவற்றை பார்க்குமாறு அல் பனா பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். மேலும் துபாய் பொதுப் பூங்காக்கள் அதிகாலை 1 மணி வரை செயல்படும் என்று துபாய் நகராட்சியின் அவசரநிலை மற்றும் நெருக்கடிக் குழுவின் தலைவர் அடெல் முகமது அல் மர்சூகி தெரிவித்துள்ளார்.

துபாய் முழுவதும் மொத்தம் 36 இடங்களில் வானவேடிக்கை மற்றும் ட்ரோன் ஷோ 2025 புத்தாண்டின் முதல் சில நிமிடங்களில் ஒளிரும். புர்ஜ் பார்க், குளோபல் வில்லேஜ், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால், அல் சீஃப், புளூவாட்டர்ஸ், தி பீச் அட் JBR மற்றும் ஹத்தா ஆகியவை முதன்மையான கொண்டாட்ட இடங்களாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel