ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள குடியிருப்பாளர்கள் பலரும் ஆவலுடன் தயாராகி வரும் நிலையில், துபாயில் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நோக்கில், அவர்களுக்கென 2025 தொழிலாளர் புத்தாண்டு நிகழ்வை துபாய் எமிரேட் ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது பேசிய GDRFA இன் இயக்குனர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மர்ரி அவர்கள், “இந்த ஆண்டு கொண்டாட்டம் UAE மற்றும் துபாய் நகரின் இந்த சமூகப் பிரிவினருக்கு நன்றியை வெளிப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பின்படி, துபாயில் உள்ள தொழிலாளர்கள், புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு கார்கள், தங்கக் கட்டிகள், பயண டிக்கெட்டுகள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். இந்த நிகழ்வுகள் நகரின் ஏழு பகுதிகளில் நடைபெறும் என்றும், விழாக்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நேரடி இசை மற்றும் மதிப்புமிக்க பரிசுகள் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் கொண்டாட்டமானது, கடந்த ஆண்டு கொண்டாட்டங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என தெரிகிறது. கடந்த ஆண்டு மூன்று இடங்களில் நிகழ்வுகள் நடத்தப்பட்டன, இதனுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஏழு பகுதிகளுக்கு இந்த நிகழ்வுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, பொழுதுபோக்கு பிரிவுகள் இன்னும் அதிக உற்சாகத்தை வழங்க கூடுதலாக இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், பங்கேற்பாளர்கள் கூடுதல் போனஸாக, 5GBக்கும் அதிகமான டேட்டாவுடன் 48 மணிநேர இலவச இணைய அணுகலையும் அனுபவிப்பார்கள், இது அவர்களின் கொண்டாட்ட அனுபவத்தை மேம்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்ட நிகழ்வுகள், விழாக்கள் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி, அல் குஸ், அல் முஹைஸ்னா மற்றும் ஜெபல் அலி உள்ளிட்ட முக்கிய இடங்களுடன் நள்ளிரவுக்குப் பிறகும் தொடரும் என்று ஆணையம் கூறியுள்ளது.
குறிப்பாக, அல் கூஸில் (Al Qouz) 10,000 விருந்தினர்கள் தங்கக்கூடிய ஒரு ஆம்பிதியேட்டரைக் கொண்ட முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், வெற்றியாளர்களுக்கு 100 க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களுடன் 500,000 திர்ஹம் வரையிலான அதிகபட்ச பரிசு Du’s ஆப் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு தொழிலாளர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டு செய்தியாக செயல்படுகிறது மற்றும் துபாயை கட்டியெழுப்புவதில் மற்றும் மேம்படுத்துவதில் அவர்களின் பங்கை அங்கீகரிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற கொண்டாட்டத்தை ஆண்டு முழுவதும் உறுதி செய்வதற்காக, ஈத் மற்றும் பிற சந்தர்ப்பங்களில் கொண்டாட்டங்கள் உட்பட, வரவிருக்கும் ஆண்டு முழுவதும் நிகழ்வுகள் இருக்கும் என்று துபாய் GDRFA சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel