ரமலான் மாதம் தொடங்கி தற்போது 13 நாட்கள் முடிந்து விட்டது. ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பிருந்து இப்தார் நேரத்தில் நோன்பை திறப்பார்கள். இதனால் இஃப்தார் நேரத்திற்கு முன்பாக உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் உணவுகளை வாங்க கூட்டம் அலைமோதும். அதிலும் குறிப்பாக துபாயில் உள்ள பர் துபாய் சூக்கின் தெருக்களில் உணவுகளை வாங்க விரைந்து செல்லும் மக்களால் அப்பகுதியே நிரம்பி வழிகிறது.
மேலும் அங்கு வரிசையாக இருக்கும் உணவகங்களிலிருந்து விற்கப்படும் சமோசாக்கள் மற்றும் சிற்றுண்டிகளின் நறுமணத்தால் நிரம்பியுள்ளன. இந்த தெருக்களில் வரிசையாக அமைந்துள்ள பல உணவகங்களில், இந்தியருக்கு சொந்தமான ஒரு புகழ்பெற்ற கடை தனித்து நிற்கிறது. இந்தக் கடையில் சிக்கன், உருளைக்கிழங்கு, கீமா, ஓமன் சிப்ஸ் உள்ளிட்ட எட்டு வகையான சமோசாக்கள் விற்கப்படுகின்றன.
மொறுமொறுப்பான சமோசாக்களுக்கு பெயர் பெற்ற இந்த உணவகத்திற்கு, துபாய் மட்டுமல்லாது ஐக்கிய அரபு அமீரகம் முழுவதிலுமிருந்து மக்கள் கூட்டமாக வருகின்றனர். குறிப்பாக, புனித ரமலான் மாதத்தில் தினமும் 35,000 க்கும் மேற்பட்ட சமோசாக்களை விற்பனை செய்வதாகவும், அரச குடும்பத்திலிருந்து அன்றாட குடியிருப்பாளர்கள் வரை ஏழு எமிரேட்களிலிருந்தும் வாடிக்கையாளர்கள் அவர்களிடமிருந்து ஆர்டர் செய்வதாகவும் கூறப்படுகிறது.
அதிலும் இந்த ஆண்டு மிகப்பெரிய ஆர்டராக அல் அய்னில் ஒரு வாடிக்கையாளருக்கு 9,000 சமோசாக்களை ஒரே நாளில் டெலிவரி செய்துள்ளனர். இது தவிர மற்றொரு ஆர்டர் மிகத் தொலைவான UAE-சவுதி எல்லையிலிருந்து வந்ததாகவும், இது எங்களுக்கு 800 கிலோமீட்டருக்கும் அதிகமான பயண தூரம் என்றும் அந்த உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
சமோசா வெற்றிக் கதை
1968 இல் அதாவது ஐக்கிய அரபு அமீரகம் உருவாவதற்கு முன்பே நிறுவப்பட்ட இந்த கடை, அன்று தொட்டு இன்று வரை அதே செய்முறையில் சமோசாக்களை தயாரித்து சுவையில் எந்த மாற்றங்களும் இல்லாமல் அசல் சுவையில் வழங்குவதால் வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் கடையைத் தேடி வந்து வாங்குவதாக கடை உரிமையாளரான ஜுஹைர் என்பவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: “எங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் எமிரேட்டியர்கள், மேலும் சுவையில் சிறிய மாற்றங்களைக் கூட அவர்களால் எளிதாகக் கவனிக்க முடியும். அதனால்தான் நாங்கள் எங்கள் செய்முறையை ஒருபோதும் மாற்றுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
கடையின் வரலாறு
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாபுட்டி ஹாஜி என்பவர் அந்த காலத்தில் படகு மூலம் துபாய்க்கு வந்துள்ளார். பின்னர் இங்கு உணவு விற்பனை செய்யும் சிற்றுண்டி உணவகம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவருக்கு ‘ஹமத் கல்ஃபான் அல் தலீல்’ என்ற எமிராட்டி நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழிலில் 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் உருவாக்கப்பட்டபோது, உணவகங்கள் உணவு பரிமாற அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதற்கு அனுமதி பெற்று தருவதற்கு அவரது எமிராட்டி நண்பர் ஹமத் உதவியுள்ளார். எனவே அவர்களின் நட்பை மதிக்கும் வகையில் இந்த உணவகத்திற்கு ‘ஹமத் கல்ஃபான் அல் தலீல்’ என அவரது பெயர் சூட்டப்பட்டதாக பாபுட்டி ஹாஜியின் பேரனான ஜூஹைர் தெரவித்துள்ளார். அவர்கள் இருவரின் மரணத்திற்குப் பிறகு, ஹமத் மகள் மற்றும் மருமகன் ஸ்பான்சர்ஷிப்பில், பாபுட்டியின் மகன் சமீர் மற்றும் பேரன் ஜுஹைர் இந்த கடையை தற்போது நடத்தி வருகின்றனர்.
உணவகத்திற்கு வாடிக்கையாளர்களை ஈர்க்க சமோசாக்கள் தற்செயலாக மெனுவில் சேர்க்கப்பட்டதாகவும், ஆரம்பத்தில் 10க்கும் குறைவான சமோசாக்களை விற்கத் தொடங்கி இப்போது அதிக தேவை காரணமாக, அமீரகம் முழுவதும் சமோசாவிற்கு பெயர் பெற்ற உணவகமாக தற்போது எங்கள் உணவகம் மாறிவிட்டதாகவும் பாபுட்டியின் மகன் சமீர் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel