இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரின் போது, ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுகளை வீசியதை அடுத்து, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஓமன் போன்ற வளைகுடா நாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளது, மேலும் இதனால் ஏற்படவிருக்கும் பெரும் விளைவுகள் குறித்தும் வளைகுடா நாடுகள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் “கடுமையான விளைவுகளைத் தவிர்க்க” ஐக்கிய அரபு அமீரகம் உடனடியாக போர் அதிகரிப்பை நிறுத்துமாறு வலியுறுத்தியது. மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளத்தை கொண்டிருக்கும் கத்தார், ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து தரப்பினரும் ஞானத்தையும், நிதானத்தையும், மேலும் பதற்றத்தைத் தவிர்க்கவும் அழைப்பு விடுத்ததுடன், அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தி, நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையில், சவுதி அரேபியாவும் அமெரிக்க தாக்குதல் குறித்து “மிகுந்த கவலையை” வெளிப்படுத்தியது.
அதில், ஈரானின் இறையாண்மையை அமெரிக்கா மீறுவதைக் கண்டித்ததுடன், கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், பதற்றத்தைத் தவிர்க்கவும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சவுதி அரேபியா வெளிப்படுத்தியுற்ளது. அத்துடன் சர்வதேச சமூகம் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை அதிகரிக்கவும் சவுதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், “இந்த மிகவும் உணர்திறன் வாய்ந்த சூழ்நிலைகளில் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதை உறுதிசெய்யும் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும், இதனால் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான ஒரு புதிய பாதையை திறக்க வேண்டும்” என்றும் அமைச்சகம் சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே நடந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்த ஓமன், அமெரிக்காவின் இந்த தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்ததுடன், இந்த மோதல் அதிகரிப்பிற்கு ஆழ்ந்த கவலை, கண்டனம் மற்றும் கண்டனத்தை வெளிப்படுத்துகிறது என்று அதிகாரப்பூர்வ ஓமன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.