ஐக்கிய அரபு அமீரகத்தில் வருடம் துவங்குவதற்கு முன் ஒவ்வொரு வருடத்திலும் கிடைக்கக்கூடிய விடுமுறைகளுக்கான பட்டியல் வெளியிடப்படுவது வழக்கமான நடைமுறையாகும். அந்த வகையில் வரவிருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புத்தாண்டு தினம் முதல் அமீரகத்தின் தேசிய தின கொண்டாட்டங்கள் வரை, அடுத்த ஆண்டு நாடு முழுவதும் வசிப்பவர்களுக்கு ஏராளமான வார விடுமுறைகள் மற்றும் தொடர் விடுமுறைகள் கிடைக்கும்.
சில விடுமுறை நாட்கள் குறிப்பிட்ட தேதிகளில் வருவது உறுதியானது என்றாலும், ஒரு சில விடுமுறை நாட்கள் இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில் பிறை பார்ப்பதைப் பொறுத்து மாறுபடக்கூடும். வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டிற்கான கணிக்கப்பட்ட அனைத்து ஐக்கிய அரபு அமீரக பொது விடுமுறைகள் பற்றிய எளிய வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, இந்த விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டால் நீங்கள் உங்கள் பயணங்களையும் குடும்ப நேரத்தையும் முன்கூட்டியே திட்டமிடத் தொடங்கலாம்.
2026 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள்
குடியிருப்பாளர்கள் 2026 ஆம் ஆண்டில் சுமார் 12 பொது விடுமுறை நாட்களை எதிர்பார்க்கலாம், குறிப்பாக நீட்டிக்கப்பட்ட வார இறுதி நாட்களுக்கான பல வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடுமுறைக்கும் அருகில் அதிகாரப்பூர்வ தேதிகள் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்படும் என்றாலும், வானியல் முன்னறிவிப்புகள் மற்றும் அமைச்சரவை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் சாத்தியமான தேதிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய முன்னறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்கள்:
ஜனவரி 1: புத்தாண்டு தினம்
ஷவ்வால் 1–3: ஈத் அல் ஃபித்ர்
துஅல் ஹிஜ்ஜா 9: அரஃபாத் நாள்
துஅல் ஹிஜ்ஜா 10–12: ஈத் அல் அதா
முஹர்ரம் 1: இஸ்லாமிய புத்தாண்டு
ரபி அல் அவ்வல் 12: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாள்
டிசம்பர் 2–3: ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம் (ஈத் அல் எதிஹாத்)
நீண்ட வார இறுதி நாட்கள்
ஈத் அல் ஃபித்ர் 2026
எதிர்பார்க்கப்படும் தேதிகள்: மார்ச் 20 வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை வரை.
ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் இந்த பண்டிகை மூன்று நாள் வார இறுதியைக் கொண்டுவரக்கூடும்.
ஈத் அல் அதா 2026
எதிர்பார்க்கப்படும் தேதிகள்: செவ்வாய், மே 26 (அராஃபாத் நாள்) முதல் மே 31 ஞாயிற்றுக்கிழமை வரை.
மிகப்பெரிய இஸ்லாமிய விடுமுறை நாட்களில் ஒன்றான இது வார இறுதியுடன் இணைந்தால் குடியிருப்பாளர்களுக்கு ஆறு நாள் வரை தொடர் விடுமுறை அளிக்கக்கூடும்.
அமீரக தேசிய தினம் (ஈத் அல் எதிஹாத்)
தேதிகள்: புதன், டிசம்பர் 2 மற்றும் வியாழன், டிசம்பர் 3. இது வாரத்தின் நடுப்பகுதியில் வருவதால், குடியிருப்பாளர்களுக்கு மற்றொரு நீண்ட வார இறுதி கிடைக்கலாம்.
UAE பொது விடுமுறைகள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன?
அமீரகத்தின் பொது விடுமுறைகள் இரண்டு நாட்காட்டிகளிலிருந்து வருகின்றன:
- கிரிகோரியன் நாட்காட்டி விடுமுறைகள்: ஒவ்வொரு ஆண்டும் மாறாத தேதிகள் (எடுத்துக்காட்டாக, புத்தாண்டு தினம் மற்றும் தேசிய தினம்).
- இஸ்லாமிய நாட்காட்டி விடுமுறைகள்: ஹிஜ்ரி நாட்காட்டி மற்றும் பிறையை பார்ப்பதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும் (எடுத்துக்காட்டாக, ஈத் அல் பித்ர் மற்றும் ஈத் அல் அதா).
2024 ஆம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானம் எண். 27 இன் படி, தொடர் விடுமுறைகளை உருவாக்க சில விடுமுறைகள் (ஈத் விடுமுறைகள் தவிர) வாரத்தின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ மாற்றப்படலாம். ஆனால், விடுமுறை வார இறுதியில் வந்தால், அது முன்னோக்கி கொண்டு செல்லப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel