அமீரகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கும் மலைகளுக்கும் இடையிலான பயணத்தை எளிதாக்க ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் (RAKTA) “Yellow Route” என்ற புதிய வாரயிறுதி பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை RAK எமிரேட்டின் போக்குவரத்து மாஸ்டர் பிளான் 2030 இன் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
மர்ஜான் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த yellow route அல் ஜசிரா அல் ஹம்ராவை அல் மர்ஜான் ஐலேண்ட் வழியாக ஜெபல் ஜெய்ஸுடன் இணைக்கும் என்றும், வழியில் உள்ள முக்கிய ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 நவம்பர் 2025 முதல் ஏப்ரல் 2026 வரை மட்டுமே இயக்கப்படும் இந்த சேவை வாரயிறுதி நாட்களில் (வெள்ளி முதல் ஞாயிறு வரை) ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பயணம் அல் ஜசிரா அல் ஹம்ராவிலிருந்து அல் மர்ஜான் தீவு வழியாகத் தொடங்கி, ஜெபல் ஜெய்ஸிலிருந்து கடைசியாகத் திரும்பும் பயணம் இரவு 9 மணிக்கு புறப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் 14 முக்கிய நிறுத்தங்கள் உள்ளன, அவை பிரபலமான ஹோட்டல்களான சோஃபிடெல் அல் ஹம்ரா பீச் ரிசார்ட், வால்டோர்ஃப் அஸ்டோரியா, ரிக்ஸோஸ் பாப் அல் பஹர், டபுள் ட்ரீ பை ஹில்டன், மோவன்பிக், ரோவ், ஹாம்ப்டன் பை ஹில்டன், புல்மேன் ரிசார்ட் மற்றும் ரேடிசன் ரிசார்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது. ADNOC ஜெபல் ஜெய்ஸ், பியர் கிரில்ஸ் எக்ஸ்ப்ளோரர்ஸ் கேம்ப், SAIJ மவுண்டன் லாட்ஜ், ஜெய்ஸ் வியூவிங் டெக் பார்க், மற்றும் 1484 பை புரோ உணவகம் உள்ளிட்ட பிரபலமான இடங்களிலும் இது நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பயணத்தை மென்மையாகவும் வசதியாகவும் ஆக்கும் வகையில், இந்த பாதையில் உள்ள அனைத்து பேருந்துகளும் வைஃபை, நிகழ்நேர கண்காணிப்பு, ‘Sayr’ செயலி மூலம் கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் கட்டண விருப்பங்கள் ஆகியவற்றுடன் வருகின்றன.
ராஸ் அல் கைமாவின் முன்னணி இடங்களை, குறிப்பாக ஜெபல் ஜெய்ஸை அடைய குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான, மலிவு மற்றும் எளிதான வழியை வழங்குவதன் மூலம் எமிரேட்டில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று RAKTA தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel