ADVERTISEMENT

UAE: 2026-ல் மாற்றப்படும் வெள்ளிக்கிழமை தொழுகை நேரம்.. பள்ளிகள் சீக்கிரமே முடிய வாய்ப்பு..!!

Published: 11 Dec 2025, 12:31 PM |
Updated: 11 Dec 2025, 12:31 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக மாற்றப்பட்டிருக்கும் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்திற்கு ஏற்ப பள்ளிகள் தங்கள் அட்டவணைகளைச் சரிசெய்யத் தயாராவதால், ஜனவரி 2026 முதல் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பள்ளி இன்னும் சீக்கிரமாக முடியக் கூடும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

ADVERTISEMENT

சமீபத்தில், இஸ்லாமிய விவகாரங்கள், அறக்கட்டளைகள் மற்றும் ஜகாத் பொது ஆணையம், ஜனவரி 2, 2026 முதல் வெள்ளிக்கிழமை தொழுகைகள் நாடு முழுவதும் மதியம் 12:45 மணிக்குத் தொடங்கும் என்று அறிவித்தது. இந்த ஒருங்கிணைந்த நேரம் நாடு முழுவதும் ஒரு சீரான தன்மையைக் கொண்டுவருவதையும், தொழுகையாளர்களுக்கு ஒட்டுமொத்த ஏற்பாடுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மாற்றத்தால், முஸ்லிம் மாணவர்கள் தொழுகைக்காக சரியான நேரத்தில் வீட்டிற்குச் செல்வதை உறுதிசெய்ய, பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தங்கள் வெள்ளிக்கிழமை வேலை நேரத்தைக் குறைக்க வேண்டியிருக்கும் என்று பள்ளித் தலைவர்கள் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எந்தவொரு புதிய அட்டவணையையும் இறுதி செய்வதற்கு முன்பு, கல்வி அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களுக்காகப் பள்ளிகள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

துபாயில் KHDA கணக்கெடுப்பு

துபாயில், அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA), புதிய தொழுகை நேரமானது கற்பித்தல் நேரம் மற்றும் பள்ளிச் செயல்பாடுகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை மதிப்பிடுவதற்காக ஒரு கணக்கெடுப்பை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, பெரும்பாலான பள்ளிகள் பல விருப்பங்களை ஆராய்ந்து வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடைவேளை நேரங்களை மாற்றுவது அல்லது பாட நேரங்களைக் குறைப்பது ஆகியவை அடங்கும். எனவே, விரைவில் பள்ளி முடியும் நேரங்கள் மாறக்கூடும் என்றும், முடிவுகள் உறுதிசெய்யப்பட்டவுடன் பெற்றோருடன் புதுப்பிப்புகள் பகிரப்படும் என்றும் பள்ளி முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

வெவ்வேறு எமிரேட்டுகள், வெவ்வேறு சவால்கள்

இதற்கிடையில், வெவ்வேறு எமிரேட்களில் உள்ள பள்ளிகள், இந்த மாற்றம் ஏற்கனவே குறுகியதாக இருக்கும் வெள்ளிக்கிழமை பள்ளி நேரங்களை மேலும் பாதிக்கலாம் என்று கூறுகின்றன.

எமிரேட்டுகளுக்கு இடையே தற்போதுள்ள வெவ்வேறு தொழுகை நேரங்கள் ஏற்கனவே போக்குவரத்துச் சவால்களை ஏற்படுத்துகின்றன என்று அஜ்மானில் உள்ள பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அஜ்மானில் மதியம் 1:15 மணி, ஷார்ஜாவில் மதியம் 12:15 மணிக்கு என வெள்ளிக்கிழமை தொழுகை தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கின்றது. மாணவர்கள் தொழுகைக்காக வீட்டிற்குச் செல்வதை உறுதிசெய்ய, வெள்ளிக்கிழமைகளில் நாங்கள் ஷார்ஜா பேருந்துகளை முதலில் அனுப்புகிறோம்” என்று பள்ளி முதல்வர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், ஒருங்கிணைந்த தேசிய நேரம், பள்ளிகள் தங்கள் மாணவர்களை அனுப்பும் உத்திகளை மறுசீரமைக்க உதவுவதற்கு கல்வி அமைச்சகத்திடமிருந்து தெளிவான வழிகாட்டுதல் தேவைப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மாணவர்கள் சரியான நேரத்தில் வீட்டிற்கு வருவதை உறுதிசெய்ய, சில பள்ளிகள் மாணவர்களை காலை 11:45 மணி அளவில் அனுப்ப வேண்டியிருக்கும் என்றும், போக்குவரத்து நெரிசல் காரணமாக அபுதாபி சிட்டியில் உள்ள பள்ளிகள் இன்னும் முன்னதாகவே மூடப்பட வேண்டியிருக்கலாம் என்றும் பள்ளி முதல்வர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இது குறித்த தெளிவுக்காக நாங்கள் ADEK-இடம் (Abu Dhabi Department of Education and Knowledge) இருந்து ஒரு சுற்றறிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, அல் அய்னில், சில பள்ளிகள் ஏற்கனவே வெள்ளிக்கிழமைகளில் குறைந்த நேரத்திற்கு இயங்கி வருகின்றன. அங்கு பள்ளி மாணவர்கள் காலை 10:40 மணிக்கே வகுப்புகளை முடித்துவிடுவதாகக் கூறப்படுகிறது. மேலும், வெள்ளிக்கிழமை நேரங்கள் குறித்து ADEK சில மாதங்களுக்கு முன்பு ஒரு கணக்கெடுப்பை நடத்தியதாகவும், தொழுகை நேர மாற்றத்தைக் கருத்தில் கொண்டு மேலும் கலந்தாலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel