ADVERTISEMENT

UAE: கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கும் 7 விசா மீறல்கள்!! விதிகளுக்கு இணங்குமாறு அறிவுறுத்தும் அதிகாரிகள் …

Published: 15 Dec 2025, 6:49 PM |
Updated: 15 Dec 2025, 6:49 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் நாட்டில் கடுமையான விதிகளை அமல்படுத்துவதன் மூலம் பொது பாதுகாப்பு மற்றும் சமூக ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் வசிப்பிடத்தை ஒழுங்குபடுத்தும் 2021 ஆம் ஆண்டின் 29 ஆம் எண் கூட்டாட்சி சட்டத்தின் கீழ், சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது, விசாக்களை தவறாகப் பயன்படுத்துதல், போலி ஆவணங்களை உருவாக்குதல் மற்றும் அனுமதிகளை மீறுதல் போன்ற மீறல்களுக்கு கடுமையான அபராதங்கள் மற்றும் தண்டனைகள் விதிக்கப்படுகிறது. எனவே, இந்த விதிகளைப் புரிந்துகொள்வது குடியிருப்பாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் மிக முக்கியமானது என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

1. சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது அல்லது பணியமர்த்துவது

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது அல்லது பணியமர்த்துவது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. குற்றவாளிகள் பின்வரும் தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் :

ADVERTISEMENT
  • சிறைத்தண்டனை: குறைந்தது 2 மாதங்கள்
  • அபராதம்: குற்றவாளிகளின் எண்ணிக்கை அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட நெட்வொர்க்குகளில் ஈடுபடுவதைப் பொறுத்து 100,000 திர்ஹம் முதல் 5 மில்லியன் திர்ஹம்,
  • நாடுகடத்தப்படுதல்: அனைத்து வழக்குகளிலும் வெளிநாட்டவருக்கு கட்டாயம் நாடு கடத்த உத்தரவிடப்படும்; மீண்டும் மீண்டும் குற்றங்கள் செய்தால் முதலாளிகள் நாடு கடத்தப்படுவதற்கும் வழிவகுக்கும்

2. விசாவை தவறாகப் பயன்படுத்துதல்

சுற்றுலா அல்லது விசிட் விசாவில் பணிபுரிவது போன்ற வழங்கப்பட்ட விசாவின் கீழ் அனுமதிக்கப்படாத செயல்களில் பணிபுரிவது அல்லது ஈடுபடுவது ஒரு மீறலாகும்.

ADVERTISEMENT

தண்டனைகளில் பின்வருவன அடங்கும்:

  • அபராதம்: குறைந்தபட்சம் 10,000 திர்ஹம்
  • சிறைத்தண்டனை: கடுமையான வழக்குகளில் சாத்தியம்
  • நாடுகடத்துதல்: நீதிமன்றம் நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிடலாம்

3. தவறான தகவல்களை வழங்குதல்

இமிக்ரேஷன் சட்டங்களைத் தவிர்ப்பதற்காக தவறான விவரங்களை வழங்குவது:

  • சிறைத்தண்டனை: 6 மாதங்கள் வரை
  • அபராதம்: 5,000 முதல் 10,000 திர்ஹம்
  • நாடுகடத்துதல்: நீதிமன்றத்தின் உத்தரவு படி நாடு கடத்தப்படுவார்கள்.

4. விசா மீறல்களை எளிதாக்குதல்

தவறான நோக்கத்திற்காக விசாவைப் பயன்படுத்த ஒருவருக்கு உதவுவது தண்டனைக்குரிய குற்றமாகும். தண்டனைகளில் பின்வருவன அடங்கும்:

  • அபராதம்: குறைந்தபட்சம் 10,000 திர்ஹம் விதிக்கப்படும், மீறுபவர்களின் எண்ணிக்கையுடன் அபராதம் அதிகரிக்கும்
  • சிறைத்தண்டனை: குற்றத்தை பொறுத்து சாத்தியம்
  • நாடுகடத்துதல்: வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு கட்டாயம்

5. போலி ஆவணங்களை உருவாக்குதல் அல்லது பயன்படுத்துதல்

போலி விசாக்கள் அல்லது ரெசிடென்ஸி ஆவணங்களைப் பயன்படுத்துதல் அல்லது உருவாக்குதல் மிகக் கடுமையான தண்டனைகளுக்கு உட்படும்:

  • சிறைத்தண்டனை: 10 ஆண்டுகள் வரை
  • நாடுகடத்துதல்: வெளிநாட்டவருக்கு கட்டாயம்

6. நிறுவனங்களுக்கான அபராதங்கள்

சட்டவிரோத வேலைவாய்ப்பு அல்லது ரெசிடென்சி மீறல்களில் பங்கேற்கும் நிறுவனங்கள் பின்வரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்:

  • அபராதம்: குறைந்தபட்சம் ஒரு மீறலுக்கு 50,000 திர்ஹம்
  • வணிக மூடல்: நீதிமன்ற உத்தரவின்படி 6 மாதங்கள் வரை மூடப்படும்.

7. நிர்வாக அபராதங்கள் & குடியிருப்பு விதிமுறைகளுக்கு இணங்காதது

காலாவதியாகி தங்கியிருக்கும் அல்லது சரியான நேரத்தில் ரெசிடென்ஸி முறையைப் புதுப்பிக்கத் தவறிய நபர்கள் பின்வருவனவற்றை எதிர்கொள்வார்கள்.

  • நிர்வாக அபராதங்கள்: சட்டவிரோதமாக தங்கியோருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் கணக்கிடப்படும்.
  • சிறைத்தண்டனை அல்லது அபராதங்கள்: அபராதம் செலுத்தப்படாவிட்டால் மூன்று மாதங்கள் சிறை தண்டனை.
  • கூடுதலாக, நாடுகடத்தவும் உத்தரவிடப்படலாம்.

அதேபோல், பெற்றோர் புதிதாகப் பிறந்த குழந்தையின் ரெசிடென்சி மற்றும் அடையாள ஆவணங்களை நான்கு மாதங்களுக்குள் பெற வேண்டும். நான்கு மாத காலத்திற்கு அப்பால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

இந்த நடவடிக்கைகள் சமூகத்தைப் பாதுகாக்கவும், சட்டவிரோத நெட்வொர்க்குகளைத் தடுக்கவும், பொது ஒழுங்கைப் பராமரிக்கவும் உதவும் என்று அமீரகம் வலியுறுத்துகிறது. கடுமையான தண்டனைகளைத் தவிர்க்க, குடியிருப்பாளர்கள் மற்றும் முதலாளிகள் தகவலறிந்தவர்களாகவும், அனைத்து விசா மற்றும் குடியிருப்பு நடைமுறைகளுக்கும் இணங்கவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel