ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM), இன்று (புதன்கிழமை) நாட்டில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் தூசிக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. காற்றுடன் தூசி வீசுவதாலும், பார்வைத் திறன் குறையும் என்பதாலும் பல பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மையம் அறிவுறுத்தியுள்ளது.
NCM வெளியிட்ட வானிலை அறிக்கையின் படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வைத் திறன் 500 மீட்டருக்கும் குறைவாகக் குறையக்கூடும். இந்த எச்சரிக்கை இன்று மாலை 4.30 மணி வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தூசி நிறைந்த சூழலுடன், வானிலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. வெப்பநிலை படிப்படியாகக் குறையத் தொடங்கும், மேலும் நாடு முழுவதும் மேகமூட்டம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NCM வெளியிடத் வானிலை முன்னறிவிப்பில், இன்றைய வானிலை தூசி நிறைந்ததாகவும், ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும், சில நேரங்களில் முழுமையாக மேகமூட்டமாக மாறும். குறிப்பாக மேற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் மிதமான முதல் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பகல் நேர வெப்பநிலை சுமார் 28°C-ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் இரவில் அதிகளவு குளிர்ச்சி உணரப்படும் என்றும் மலைப் பகுதிகளில், வெப்பநிலை 8°C வரை குறையக்கூடும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை நிலவரப்படி, துபாயில் மேகமூட்டமான மற்றும் காற்று வீசும் சூழல் நிலவியது, வெப்பநிலை சுமார் 24°C ஆக இருந்தது. அதே நேரத்தில் அதிகாலை 3.45 மணிக்கு ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெய்ஸ் மலையில் பதிவான 9.7°C வெப்பநிலை நாட்டில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வெப்பநிலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காற்றின் வேகத்தைப் பொறுத்தவரை, மணிக்கு 10 முதல் 25 கி.மீ வேகத்தில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, திறந்தவெளி பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ வரை வேகம் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய மறைவிற்குப் பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரப்பதம் 85 சதவீதம் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இது ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் இரவில் மூடுபனி அல்லது பனிமூட்டம் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் பொதுவாக பாதுகாப்பாக இருந்தாலும், வேகமான காற்று வீசும் காலங்களில் கடல் நிலவரத்தில் லேசான மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel