ஷார்ஜா அமீரகத்தில் வழித்தடப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, 30,000-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விதிகள் டெலிவரி பைக்குகள், கனரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பேருந்துகளுக்கு குறிப்பிட்ட வழித்தடங்களை வரையறுக்கின்றன. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும் இந்த விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளின்படி, வலதுபுறம் உள்ள கடைசி வழித்தடம் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மோட்டார் சைக்கிள்கள் இடதுபுறம் உள்ள வேகமான வழித்தடங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. நான்கு வழித்தடங்கள் கொண்ட சாலைகளில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் வலதுபுறம் உள்ள இரண்டு வழித்தடங்களைப் பயன்படுத்தலாம். மூன்று வழித்தடச் சாலைகளில், அவர்கள் நடு அல்லது வலது வழித்தடத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் இரண்டு வழித்தடச் சாலைகளில், அவர்கள் வலது வழித்தடத்திலேயே பயணிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட வழித்தட விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. ஒதுக்கப்பட்ட வழித்தடங்களைப் பயன்படுத்தாத கனரக வாகன ஓட்டுநர்களுக்கு 1,500 திர்ஹாம் அபராதம் மற்றும் 12 பிளாக் பாயின்ட்ஸ் விதிக்கப்ட்டதாகவும், போக்குவரத்து அடையாளங்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியவர்களுக்கு கூடுதலாக 500 திர்ஹாம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்கவும், சட்டத்தை அமல்படுத்தவும் ஸ்மார்ட் ரேடார்கள், மேம்பட்ட கேமரா அமைப்புகள் மற்றும் போக்குவரத்து ரோந்துப் பணிகளைப் பயன்படுத்துவதாக ஷார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே, அமீரகத்தின் சாலைகளில் பாதுகாப்பைப் பேணுவதற்கு, அனைத்து சாலைப் பயனர்களும் ஒதுக்கப்பட்ட வழித்தடங்களைப் பின்பற்றி, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel