ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதிகமான குளிர் நிலவி வந்த நிலையில், நேற்று (டிசம்பர் 22ம் தேதி) நாட்டில் அதிகாரப்பூர்வமாக குளிர்காலம் தொடங்கியுள்ளதாக அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
இருப்பினும் குளிர்காலம் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்னதாகவே அமீரகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வெப்பநிலை டிசம்பர் 20 அன்று பதிவானதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதாவது அன்று நள்ளிரவில் ஜெபல் ஜெய்சில் வெப்பநிலை 3.5°C ஆகக் குறைந்துள்ளது. இது இந்த பருவத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை ஆகும்.
அதுமட்டுமல்லாமல் அமீரகத்தில் கடந்த டிசம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் பலத்த காற்று வீசியது, அதைத் தொடர்ந்து சில பகுதிகளில் கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த திடீர் வானிலை மாற்றம் மக்களின் அன்றாடப் பணிகளைப் பாதித்தது. குறிப்பாக துபாய் மற்றும் அருகிலுள்ள மற்ற எமிரேட்டுகளில் வசிப்பவர்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் குளிர்காலம் எப்படி இருக்கும்?
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலம் தொடங்கியுள்ளதாக கூறப்படும் பட்சத்தில் பொதுவாக அமீரகத்தில் இது மிதமான மற்றும் இதமான காலநிலையைக் கொண்டுவரும் என கூறப்படுகின்றது, இருப்பினும் அவ்வப்போது ஏற்படும் மழையானது திடீர் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அதே நேரத்தில் அமீரகத்தில் குளிர்காலத்தின் போது ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் குறித்த விபரங்களை கீழே காணலாம்.
- சராசரி அதிகபட்ச வெப்பநிலை: 24–27°C
- சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை: 14–16°C
- சராசரி ஈரப்பதம்: 55–64%
- சராசரி காற்றின் வேகம்: 11–13 கி.மீ/மணி
இந்த பருவத்தில், செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளிலிருந்தும், சில நேரங்களில் கிழக்கிலிருந்தும் வரும் வானிலை மாற்றங்கள் நாட்டைப் பாதிக்கும். இது மேகமூட்டத்தையும் மழை பெய்வதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும். மேலும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது காலை நேரங்களில் மூடுபனி ஏற்படுவதும் பொதுவானது என்று கூறப்பட்டுள்ளது.
வானிலை இடத்திற்கு இடம் மாறுபடும்
ஐக்கிய அரபு அமீரகத்தின் மாறுபட்ட நிலப்பரப்பு காரணமாக, குளிர்கால நிலைமைகள் நாடு முழுவதும் வேறுபடுகின்றன.
- பாலைவனப் பகுதிகள்: குளிர்ச்சியான இரவுகள் மற்றும் மிதமான பகல்நேர வெப்பநிலை
- மலைப் பகுதிகள்: குளிர்ச்சியான சூழ்நிலைகள், குறிப்பாக ஜெபல் ஜெய்ஸ் போன்ற இடங்களில் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்
- கடலோர நகரங்கள்: இனிமையான வானிலை மற்றும் அமைதியான கடல். இது வெளிப்புற மற்றும் கடல் நடவடிக்கைகளுக்கு ஏற்றது
அவ்வப்போது லேசான முதல் மிதமான அளவில் பெய்யும் மழை இதமான வெளிப்புற வானிலையை உருவாக்குகிறது, அதே வேளையில், வெள்ளப்பெருக்கு ஆபத்தானது என்பதால், கனமழையின் போது பள்ளத்தாக்குகளை தவிர்க்குமாறு அதிகாரிகள் குடியிருப்பாளர்களை எச்சரிக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலம் நீண்ட கோடை வெப்பத்திற்குப் பிறகு, நடைபயணம் மற்றும் வெளிப்புறங்களை குடியிருப்பாளர்கள் அனுபவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்குகிறது. பொதுவாக சுற்றுலா பயணிகளும் இந்த காலத்தின் போதே அமீரகத்திற்கு அதிகளவில் வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel