ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா வருபவர்கள் வாகனம் ஓட்டத் திட்டமிட்டால், வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்கள், கார் வாடகை, இன்சூரன்ஸ் மற்றும் செக்யூரிட்டி டெபாசிட் தொடர்பான விதிகளைப் புரிந்துகொள்வது அவசியம். இது சுற்றுலாவாசிகளின் தேசியம், அவர்கள் வைத்திருக்கும் உரிமத்தின் வகை மற்றும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாடகை நிறுவனம் ஆகியவற்றைப் பொறுத்து தேவைகள் மாறுபடும். ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுலாவாசிகள் சட்டப்பூர்வமாகவும் நம்பிக்கையுடனும் வாகனம் ஓட்ட உதவும் ஒரு எளிய வழிகாட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த நாட்டின் உரிமத்தைப் பயன்படுத்தி வாகனம் ஓட்ட முடியுமா?
குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா அல்லது விசிட் விசா மூலம் வருகை தந்தால், தங்கள் சொந்த நாட்டில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகனம் ஓட்டலாம்.
ஐக்கிய அரபு அமீரகம் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் தென் கொரியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் உரிமங்களை அங்கீகரிக்கிறது. இந்த நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாவாசிகளுக்கு அவர்கள் தங்கியிருக்கும் காலத்தில் ஐக்கிய அரபு அமீரக ஓட்டுநர் உரிமம் அல்லது சர்வதேச ஓட்டுநர் அனுமதி (IDP) தேவையில்லை. அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் காணலாம். இருப்பினும் இதில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
GCC உரிமத்துடன் வாகனம் ஓட்டுதல்
அதேபோல், GCC நாடுகளால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தைக் கொண்ட சுற்றுலாவாசிகளும் கூடுதல் அனுமதிகள் இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகனம் ஓட்டலாம். சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் உரிமங்கள் மூலம் அமீரகத்தில் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், GCC நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களாக மாறினால், அவர்கள் ஐக்கிய அரபு அமீரக உரிமத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச ஓட்டுநர் அனுமதி (International Driving Permit) எப்போது தேவைப்படும்?
இந்தியா, இலங்கை போன்று சொந்த நாட்டின் உரிமத்தை ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகரிக்கவில்லை என்றால், உங்கள் அசல் உரிமத்துடன் செல்லுபடியாகும் சர்வதேச ஓட்டுநர் அனுமதியையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அந்த உரிமம் குறைந்தது ஒரு வருடமாவது வைத்திருக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், அமீரகத்தில் உள்ள கார் வாடகை (rent a car) நிறுவனங்களின் கொள்கைகள் மாறுபடலாம், எனவே பார்வையாளர்கள் பயணம் செய்வதற்கு முன், தாங்கள் தேர்ந்தெடுத்த கார் வாடகை நிறுவனத்திடம் உரிமம் தொடர்பான தேவைகளை நேரடியாக உறுதிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கார் வாடகைக்கு எடுப்பதற்கான வயது வரம்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் கார் வாடகைக்கு எடுப்பதற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது 21 ஆகும். எனினும் சில வாடகை நிறுவனங்கள், குறிப்பாக சொகுசு அல்லது உயர் செயல்திறன் கொண்ட வாகனங்களை வழங்கும் நிறுவனங்கள், ஓட்டுநர்கள் 25 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று கூறலாம். வயது வரம்புகள் வாகன வகை மற்றும் நிறுவனத்தின் கொள்கையைப் பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
பெரும்பாலான வாடகை நிறுவனங்கள் பின்வருவனவற்றை சமர்ப்பிக்குமாறு கோரலாம்:
- செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
- tourist அல்லது விசிட் விசா
- தாய் நாட்டில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் அல்லது IDP (தேவைப்பட்டால்)
- ஓட்டுநரின் பெயரில் ஒரு கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டுகள் பொதுவாக இந்த சமயங்களில் செக்யூரிட்டி டெபாசிட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றன. டெபாசிட் தொகையானது சாத்தியமான போக்குவரத்து அபராதங்கள், சாலிக் கட்டணங்கள் அல்லது வாகன சேதத்தை உள்ளடக்கியதாகும்.
செக்யூரிட்டி டெபாசிட்டானது நிறுவனம் மற்றும் கார் வகையைப் பொறுத்து மாறுபடும். அமீரக விதிமுறைகளின் கீழ், அபராதம் அல்லது சேதங்கள் எதுவும் இல்லை என்றால், வாகனம் திருப்பி கொடுக்கப்பட்ட 30 நாட்களுக்குள் டெபாசிட் விடுவிக்கப்பட வேண்டும். டெபாசிட் தொகை திரும்பப் பெறப்படாவிட்டால், நுகர்வோர் consumerrights.ae வழியாக பொருளாதார மேம்பாட்டுத் துறையிடம் அல்லது 600 545555 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் புகார் அளிக்கலாம்.
இன்சூரன்ஸ் பாதுகாப்பு
அமீரகத்தில் உள்ள அனைத்து வாடகை கார்களும் கட்டாய மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸுடன் (third party insurance) வருகின்றன. இல்லையெனில் மோதலால் ஏற்பட்ட சேதம் (collision damage) அல்லது பூஜ்ஜிய காப்பீடு (zero excess insurance) போன்றவைக்கான கூடுதல் தொகையில் காப்பீட்டு தொகை விருப்பத்தையும் வழங்கலாம்.
கார் வாடகை விருப்பங்கள்
பார்வையாளர்கள் முக்கிய விமான நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் நகர கிளைகளில் சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்களிடமிருந்து கார்களை வாடகைக்கு எடுக்கலாம். மேலும் ‘Udrive’, ‘eKar’ மற்றும் ‘Yaldi’ போன்ற செயலி சார்ந்த சேவைகளின் மூலமாகவும் கார்களை வாடகைக்கு எடுக்கலாம். இந்த மொபைல் செயலி மூலம் நிமிடம், மணி நேரம் அல்லது நாள் அடிப்படையில் கார்களை வாடகைக்கு எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel