ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியதைத் தொடர்ந்து வெப்பநிலை கடுமையாக சரிந்ததால், அல் அய்ன் நகரத்திற்கு வடக்கே உள்ள ரக்னாவில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் லேசான உறைபனி பதிவு செய்யப்பட்டதாக எமிரேட்ஸ் வானியல் சங்கத்தைச் சேர்ந்த யூசுப் அல் காசிமி தெரிவித்துள்ளார்.
அத்துடன் வானிலை நிலவரம் கிட்டத்தட்ட ஒரு வாரமாக உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வந்ததால், இந்த உறைபனி எதிர்பார்க்கப்பட்டதே என்றும் அல் காசிமி கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு வானிலை அமைப்பு நாட்டை கடந்து சென்ற பிறகு, குளிர்ந்த காற்று வீசியது. இது ஒரே இரவில் வெப்பநிலை கணிசமாகக் குறைவதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது என்று கூறப்படுகின்றது.

வானிலை முன்னறிவிப்புத் தரவுகளின்படி, லிவா மற்றும் அல் தஃப்ரா போன்ற மேற்குப் பகுதிகளில் வெப்பநிலை 5°C-க்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கள அனுபவத்தின் அடிப்படையில், அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளில் இது தெளிவாகக் காட்டப்படாவிட்டாலும், அருகிலுள்ள இடங்களை விட ரக்னாவில் வெப்பநிலை வேகமாக குறையும் என்று அல் காசிமியும் அவரது குழுவினரும் எதிர்பார்த்தததாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சூரிய உதயத்திற்கு முன்பு, தரைமட்ட நிலவரங்களைக் கவனிக்க ரக்னாவிற்குப் புறப்பட்ட அந்தக் குழு, அதிகாரப்பூர்வ வானிலை நிலையங்கள் சுமார் 4°C வெப்பநிலையைப் பதிவு செய்திருந்தாலும், கள அளவீடுகள் பூஜ்ஜியத்திற்கு மேல் 1°C-க்கு நெருக்கமான அளவீடுகளைக் காட்டியதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக உலோகம் மற்றும் விவசாயப் பாதுகாப்பு உறைகள் போன்ற வெப்பத்தை விரைவாக இழக்கும் பொருட்களில் உறைபனி காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து விவரித்த அல் காசிமி, “அல் அய்னில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் உறைபனி ஏற்படுகிறது, ஆனால் அதன் தீவிரம் மாறுபடும்,” என்று கூறியுள்ளார். 2021-ல் தான் மிகவும் கடுமையான உறைபனி பதிவு செய்யப்பட்டது என்றும், அப்போது ரக்னாவில் கள அளவீடுகள் மைனஸ் 7°C ஆகக் குறைந்ததாகவும், அதே நேரத்தில் அதிகாரப்பூர்வ நிலையங்கள் மைனஸ் 2°C-ஐப் பதிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட மணல் திட்டுகளுக்கு இடையில் அமைந்துள்ள ரக்னாவின் மணல் நிறைந்த நிலப்பரப்பு, வெப்பம் விரைவாக வெளியேற அனுமதிக்கிறது என்றும், இது அந்தப் பகுதியை உறைபனிக்கு ஆளாக்குகிறது என்றும், குறிப்பாக நாளின் மிகக் குளிரான நேரமான சூரிய உதயத்திற்கு முந்தைய நிமிடங்களில் இது நிகழ்கிறது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த உறைபனி, இந்த பருவத்தில் ரக்னாவில் பதிவு செய்யப்பட்ட முதல் உறைபனியாகும். வெப்பநிலை உயரத் தொடங்குவதற்கு சற்று முன்பு, சூரிய உதயத்திற்குச் சற்று முன்னதாக இது மிகவும் தெளிவாகக் காணப்பட்டது. வரும் காலங்களில், குளிர்காலத்தில் அல் அய்னின் சில பகுதிகளில் மீண்டும் உறைபனி ஏற்படக்கூடும் என்றும், ஆனால் குளிர்ந்த காற்று இப்பகுதி வழியாகச் செல்லும்போது மட்டுமே இது நிகழும் என்றும் அல் காசிமி கூறியுள்ளார்.
இதுபோன்ற உறைபனி குறிப்பிட்ட குளிர்கால காலங்களில் மட்டுமே ஏற்படும் என்றும், ஆண்டு முழுவதும் ஏற்படுவதில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பனிப்பொழிவு ஏற்படுவது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தாலும், கடுமையான குளிர் காலங்களில் அசாதாரண வானிலை நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்றும், எனவே குளிர்கால மாதங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு முக்கியம் என்றும் அல் காசிமி தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel