துபாய் முழுவதும் வசிப்பவர்கள், பார்வையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, பார்க்கிங்கை எளிமையாகவும் திறமையாகவும் மாற்றும் நோக்கில், பார்க்கின் நிறுவனம் தொடர்ச்சியான டிஜிட்டல் மேம்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய புதுப்பிப்பு பல பார்க்கிங் அனுமதி சேவைகளை பார்க்கின் செயலிக்குள் ஒருங்கிணைத்துள்ளது, இவை பயனர்கள் ஒரே டிஜிட்டல் தளத்தின் மூலம் அணுகல், தகுதி மற்றும் கட்டணங்களை நிர்வகிக்க அனுமதிக்கின்றன.
இது குறித்து பார்க்கின் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஒசாமா அல்சாஃபி அவர்கள் கூறுகையில், இந்த மேம்பாடுகள் துபாயின் ஸ்மார்ட் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய போக்குவரத்து குறித்த பரந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, முக்கிய மேம்பாடுகளில் ஒன்று, அதிக வசதி மற்றும் செலவு சேமிப்பை வழங்கும் புதிய அனுமதி மற்றும் சந்தா விருப்பங்களாகும். அதில் எமிராட்டி குடியிருப்பாளர்கள் இப்போது எமிராட்டி குடியிருப்பு பார்க்கிங் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம், மேலும், மூத்த எமிராட்டி குடிமக்கள், A முதல் D வரையிலான அனைத்து பொது பார்க்கிங் மண்டலங்களிலும் மூன்று ஆண்டுகளுக்கு இலவச பார்க்கிங் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
அதேபோல், மாற்றுத்திறனாளிகளும் இந்த விரிவாக்கப்பட்ட அனுமதி அமைப்பின் கீழ் பயனடைகின்றனர். அவர்களுக்கு தனிப்பட்ட தகுதியின் அடிப்படையில் இலவச அல்லது பிரத்யேக பார்க்கிங் விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. நிரந்தர அனுமதிகள் மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் மற்றும் ஐந்து வாகனங்கள் வரை சேர்க்கப்படலாம். அதே சமயம் தற்காலிக அனுமதிகள் ஒரு வருடம் வரை செல்லுபடியாகும், இது மருத்துவக் குழுவின் ஒப்புதலுடன் குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களுக்குக் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளியாக இருக்கும் சுற்றுலாப் பயணிகளும் 60 நாட்கள் வரையிலான குறுகிய கால அனுமதிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ சிகிச்சை பெறும் நபர்களுக்காக கூடுதல் பிரத்யேக பார்க்கிங் விருப்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அனுமதிகள், சிகிச்சை காலம் முழுவதும் மருத்துவ வசதிகளுக்கு அருகிலுள்ள கட்டண பார்க்கிங் இடங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்த அனுமதிக்கின்றன.
அத்துடன், துபாயில் வசிக்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளின் குடிமக்கள் இப்போது இரண்டு வாகனங்கள் வரை ஒரு வருடத்திற்கு இலவச பார்க்கிங் பெறத் தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்காக, பார்க்கிங் கட்டண நிர்வாகத்தை எளிதாக்க பார்க்கின் நிறுவனம் ஒரு புதிய வணிக மற்றும் அரசு வாலட்டை (Business and Government Wallet) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் தீர்வு, நிறுவனங்கள் பார்க்கிங் கட்டணங்களை மையப்படுத்தவும், அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களைப் பதிவு செய்யவும் மற்றும் நேரம் அல்லது இருப்பிடத்தின் அடிப்படையில் பயன்பாட்டு வரம்புகளை அமைக்கவும் அனுமதிக்கிறது.
அதிக திறமையான பார்க்கிங் நிர்வாகத்திற்காக நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து வரும் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக இந்த வாலட் உருவாக்கப்பட்டது என்று அல்சாஃபி கூறியுள்ளார்.
இவ்வாறு பார்க்கிங் அனுமதிகள், கட்டணங்கள் மற்றும் தகுதி ஆகிய அனைத்தும் இப்போது ஒரே செயலிக்குள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், இந்த சமீபத்திய அப்டேட் நிர்வாகச் சிக்கல்களைக் குறைத்து, துபாயின் வாகன ஓட்டிகளுக்கு வாகன நிறுத்துமிட அனுபவத்தை ஒரு தடையற்ற, அன்றாட நிகழ்வாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று பார்க்கின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel