துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), அல் கைல் சாலைக்கும் ஷேக் சையத் சாலைக்கும் இடையிலான நெரிசலைக் குறைக்கும் நோக்கில் 690 மில்லியன் திர்ஹம் செலவில் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய உள்கட்டமைப்பு மேம்பாடான ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தை திறந்துள்ளது.
இந்தத் திட்டம் ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டின் 4.5 கிலோமீட்டர் நீளத்தை உள்ளடக்கியது, இது இப்போது இரு திசைகளிலும் நான்கு பாதைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி அல் அசாயல் ஸ்ட்ரீட், ஃபர்ஸ்ட் அல் கைல் ஸ்ட்ரீட் மற்றும் ஷேக் சையத் சாலை ஆகியவற்றுடன் முக்கிய இண்டர்செக்ஷன்களிலும் புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன, இது முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்பு சமூகங்களுக்கு இடையிலான போக்குவரத்தை எளிதாக்கும் என்று ஆணையம் கூறியுள்ளது.
RTA-வின் கூற்றுப்படி, இந்த மேம்பாடு ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டில் மணிக்கு 8,000 வாகனங்களிலிருந்து மணிக்கு 16,000 வாகனங்களாக போக்குவரத்து திறனை இரட்டிப்பாக்கும், மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் 640,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட இந்த நடைபாதை அல் சுஃபூ 2, அல் பர்ஷா மற்றும் ஜுமேரா வில்லேஜ் சர்க்கிள் உள்ளிட்ட பல அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளை இணைக்கிறது.
கட்டுமானத்தில் 90 சதவீதம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், கூடுதல் சாலை மேம்பாடுகள், இண்டர்செக்ஷன் மேம்பாடுகள் மற்றும் 13.5 கிலோமீட்டர் சைக்கிளிங் பாதையை அறிமுகப்படுத்துதல் உட்பட மீதமுள்ள பணிகள் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து RTA-வின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் இயக்குநர் ஜெனரலும் தலைவருமான மட்டர் அல் தாயர் வெளியிட்ட அறிக்கையில், இந்த திட்டம் நிலையான இயக்கத்திற்கும் முன்னுரிமை அளிக்கிறது என்றும், 4.5 மீட்டர் அகலம் கொண்ட பிரத்யேக சைக்கிளிங் மற்றும் இ-ஸ்கூட்டர் பாதைகள், குடியிருப்பு சுற்றுப்புறங்களை துபாய் இன்டர்நெட் சிட்டி மெட்ரோ நிலையம் மற்றும் அருகிலுள்ள வணிக இடங்களுடன் இணைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பாதை அல் சுஃபூ மற்றும் துபாய் ஹில்ஸை ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் வழியாக இணைக்கும், அல் பர்ஷா மற்றும் பர்ஷா ஹைட்ஸ் வழியாக செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், ஷேக் சையத் சாலை மற்றும் அல் கைல் சாலையைக் கடக்கும் பிரத்யேக பாலம் கட்டமைக்கப்படுவதால் பாதசாரிகள் நடமாட்டம் எளிதாகும் என்று கூறப்படுகிறது. ஐந்து மீட்டர் அகலமுள்ள இந்தப் பாலத்தில் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இ-ஸ்கூட்டர் பயனர்களுக்கு மூன்று மீட்டர்களும், பாதசாரிகளுக்கு இரண்டு மீட்டர்களும் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண நேரத்தைக் குறைப்பதற்கும் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் நான்கு முக்கிய இன்டர்செக்ஷனில் விரிவான மேம்பாடுகளும் இந்த திட்டத்தில் அடங்கும். துபாய் மெட்ரோ ரெட் லைனைக் கடந்து செல்லும் ஷேக் சையத் சாலையில் இருவழி சாய்வுப் பாலம், பர்ஸ்ட் அல் கைல் ஸ்ட்ரீட் மற்றும் அல் அசயேல் ஸ்ட்ரீட்டில் விரிவாக்கப்பட்ட பாலங்கள் மற்றும் ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டை அல் கைல் சாலையை ஷார்ஜா நோக்கி இணைக்கும் புதிய இருவழி திசை சாய்வுப் பாதை ஆகியவை இதில் அடங்கும்.
இந்த மேம்பாடுகள் முழுமையாக நிறைவடைந்தவுடன், ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டம் நெரிசலைக் குறைப்பதிலும், இணைப்பை மேம்படுத்துவதிலும், துபாயின் வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel