ஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய தனியார் சுகாதார நிறுவனங்களில் ஒன்றானது, அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் புர்ஜீல் ஹோல்டிங் நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின் ஊழியர்களின் வருடாந்திர கூட்டம் ஒன்று அபுதாபியில் உள்ள எதிஹாட் அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அதன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ஷம்ஷீர் வயலில் அவர்கள், அதன் சுகாதாரப் பணியாளர்களுக்கு 15 மில்லியன் திர்ஹம்ஸ் நிதியை அதிரடியாக அறிவித்து ஊழியர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.
புர்ஜீல் நிறுவனத்தில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களின் கூட்டமாக அறிவிக்கப்பட்டு, அதன் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை சுகாதார வல்லுநர்கள் மற்றும் துணை ஊழியர்கள் என 8,500 க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒன்றிணைத்த இந்த நிகழ்வில், டாக்டர் ஷம்ஷீர் வயலில் அவர்களின் அதிரடி அறிவிப்பானது ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்ததுடன் நம்பமுடியாத தருணமாகவும் மாறியுள்ளது. மேலும் இதுவே அமீரகத்தில் ஊழியர்களை வைத்து தலைமை நிர்வாக அதிகாரி தலைமையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய நிகழ்வாகும்.
‘Burjeel Proud’ எனும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, முதல் கட்டத்தில் கிட்டத்தட்ட 10,000 முன்னணி ஊழியர்களுக்கு பயனளிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் புர்ஜீல் ஹோல்டிங்ஸின் நர்சிங், சுகாதாரம், நோயாளி பராமரிப்பு, செயல்பாடுகள் மற்றும் ஆதரவு பணியாளர்களில் கிட்டத்தட்ட 85 சதவீத முன்னணி ஊழியர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் கீழ் வழங்கப்படும் நிதியானது ஊழியர்களின் பணிநிலையை பொறுத்து ஒரு மாதம் அடிப்படை சம்பளம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அபுதாபியில் முகமது பின் சையத் நகரில் அமைந்துள்ள புர்ஜீல் மெடிக்கல் சிட்டியின் ‘விஷன் 2030’ எனும் வருங்கால தொலைநோக்குப் பார்வை பற்றிய விபரங்களும் இந்த நிகழ்வில் இடம்பெற்றுள்ளது. அதாவது, மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவக் கல்வி, மறுவாழ்வு சேவைகள் மற்றும் நோயாளிகளை மையமாகக் கொண்ட வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றை மேம்பட்ட மருத்துவ பராமரிப்புடன் ஒருங்கிணைத்து, உலகளவில் மருத்துவ துறையில் முன்னேறுவதை ‘விஷன் 2030’ நோக்கமாகக் கொண்டுள்ளதாக புர்ஜீல் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel