அமீரகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் எதிஹாட் ரயில் சேவை இந்தாண்டு செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பல வருட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, எதிஹாட் ரயில் அதன் பயணிகள் ரயில் வலையமைப்பின் முதல் வழித்தடங்களை தற்பொழுது வெளியிட்டுள்ளது, இது ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்து பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 2026 முதல், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அபுதாபி, துபாய் மற்றும் ஃபுஜைரா இடையே ரயில் மூலம் பயணிக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது, இது நாட்டின் முக்கிய வணிக மையங்களுக்கும் கிழக்கு கடற்கரைக்கும் இடையே வேகமான, நவீன இணைப்பை உருவாக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
முதல் வழித்தடங்கள்
இது குறித்து எதிஹாட் ரயில் மொபிலிட்டியின் துணை தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ஸா அல் சுவைதி (Azza Al Suwaidi) அவர்கள் பேசுகையில், இந்தச் சேவையின் முதல்கட்டம் மூன்று முக்கிய எமிரேட்களில் கவனம் செலுத்தும் என்றும், தேவை அதிகரிக்கும் போது 2026 முதல் கூடுதல் வழித்தடங்கள், நிலையங்கள் மற்றும் இணைப்புகள் தொடரும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: “ஆரம்பத்தில், எங்கள் இரட்டை வர்த்தக மையங்களான அபுதாபி மற்றும் துபாய் இடையே ரயில்கள் இயக்கப்படும், அதே போல் கிழக்கில் உள்ள ஃபுஜைராவுடன் இணைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
நகரங்களுக்கு இடையேயான பயணம்
புதிய பயணிகள் ரயில்கள் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:
- அபுதாபியிலிருந்து துபாய்: சுமார் 1 மணி நேரம்
- அபுதாபியிலிருந்து ஃபுஜைரா: சுமார் 90 நிமிடங்கள்
மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயில், சுமார் 400 பயணிகளை ஏற்றிச் செல்லும், இது பரபரப்பான நெடுஞ்சாலைகளுக்கு வசதியான மாற்று இயக்கமாக இருக்கும். முக்கியமாக அபுதாபி-துபாய் பாதையில் அடிக்கடி சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது, இது இரு எமிரேட்களுக்கும் இடையே வலுவான பயணிகள் மற்றும் வணிக பயண தேவையை பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் புஜைரா சுற்றுலா மற்றும் கிழக்கு கடற்கரை அணுகலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் நிலையங்கள்
முதல் மூன்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள்:
- முகமது பின் சையத் சிட்டி, அபுதாபி
- ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸ், துபாய்
- அல் ஹிலால் நகரத்திற்கு அருகில் உள்ள சகாம்காம் பகுதி, ஃபுஜைரா
மேற்கூறிய மூன்று நிலையங்களின் கட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களில் வேகமாக முன்னேறியுள்ளன என்றும், நிலையங்கள் வரவேற்கத்தக்க மற்றும் செல்வதற்கு எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் ரயில் சேவைகள் தொடங்கியவுடன் எத்திஹாட் ரயில் ஆண்டுதோறும் 10 மில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்லும் என்று எதிர்பார்க்கிறது. அதுமட்டுமில்லாமல், பயணிகள் ரயில்கள் தற்போதுள்ள சரக்கு நெட்வொர்க்கில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 11 நிலைய இடங்களை உறுதிப்படுத்தியது, மக்கள் தொகை அடர்த்தி, பயண தேவை மற்றும் எதிர்கால நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் அடிப்படையில் இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன என்று அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
ரயில் பயணத்திற்கு அப்பால் திட்டமிடல்
எத்திஹாட் ரயில் மற்ற போக்குவரத்து இணைப்பிலும் கவனம் செலுத்துகிறது, இது நிலையங்களை பின்வருவனவற்றுடன் ஒருங்கிணைக்க செயல்படுகிறது:
- மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகள்
- டாக்சிகள் மற்றும் ரைடு-ஹெய்லிங் தளங்கள்
- சைக்கிள் மற்றும் தனிப்பட்ட போக்குவரத்து வசதிகள்
இது குறித்து பேசிய அல் சுவைதி, “மக்கள் நிலையத்திற்கு எப்படிச் செல்வது மற்றும் திரும்புவது என்பது பயணத்தைப் போலவே முக்கியமானது,” என்றும், இதற்காக யாங்கோ குழுமம் உள்ளிட்ட போக்குவரத்து வழங்குநர்களுடன் கூட்டாண்மையில் இணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2009 இல் நிறுவப்பட்ட எதிஹாட் ரயில், பல ஆண்டுகளுக்கு முன்பு சரக்கு நடவடிக்கைகளைத் தொடங்கியது, நாடு தழுவிய சரக்கு நெட்வொர்க் 2023 இல் நிறைவடைந்தது. அதே நேரத்தில் பயணிகள் நெட்வொர்க்கை உருவாக்குவதில் 7,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் 24 மில்லியன் வேலை நேரங்களும் ஈடுபடுத்தப்பட்டதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அபுதாபிக்கும் துபாய்க்கும் இடையில் தனி மின்மயமாக்கப்பட்ட அதிவேக ரயில் பாதைக்கான திட்டங்களும் நடந்து வருகின்றன, இது பயண நேரத்தை வெறும் 30 நிமிடங்களாக குறைக்கக்கூடும். இருப்பினும் அந்த சேவைக்கான தொடக்க தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel