துபாயின் மிகவும் பிரபலமான உலகளாவிய நிகழ்வுகளில் ஒன்றான ‘Gulfood’ நேற்று (திங்கட்கிழமை) கோலாகலமாக தொடங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்ததால் மீண்டும் நகரமானது உணவு, சுவைகள் மற்றும் புதுமைகளுக்கான உலகின் சந்திப்பு இடமாக மாறியது. உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் பான வர்த்தக கண்காட்சி என அங்கீகரிக்கப்பட்ட இந்த நிகழ்வு, ஆயிரக்கணக்கான உலகளாவிய பிராண்டுகள், தொழில் தலைவர்கள் மற்றும் நுகர்வோர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது. அத்துடன் இந்த ஆண்டு பதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பெரியதாகும். இது இந்தாண்டு துபாய் வேர்ல்ட் ட்ரேட் சென்டர் (DWTC) மற்றும் எக்ஸ்போ சிட்டியில் உள்ள துபாய் கண்காட்சி மையம் என இரண்டு முக்கிய இடங்களில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் அதிநவீன உணவு தொழில்நுட்பம் முதல் ஆடம்பர மற்றும் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட தயாரிப்புகள் வரை அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, நிகழ்வில் காணப்பட்ட அருமையான மற்றும் அதிகம் பேசப்படும் தயாரிப்புகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்:
1. தங்கத் துகள்களால் நிரப்பப்பட்ட தண்ணீர்
இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட 24-காரட் தங்கத் துகள்களால் நிரப்பப்பட்ட ‘Ocard’ என்ற பிராண்டின் பிரீமியம் மினரல் வாட்டர் பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. இந்த ஆடம்பரமான தண்ணீர் உஸ்பெகிஸ்தானில் செயல்படும் நிறுவனத்தால் ஐரோப்பாவின் பழமையான தங்கச் சுரங்க ஆலைகளில் ஒன்றிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், இந்த பாட்டிலில் உள்ள தங்கத் துகள்களை மிதக்க வைக்க, அந்த பாட்டில் சுழலும் ஸ்டாண்டில் காட்சிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இந்த தயாரிப்பு ஒரு பாட்டிலுக்கு சுமார் 360 திர்ஹம்ஸ்க்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

2. தேனில் பாதுகாக்கப்படும் மோரல் காளான்கள்
‘Wild Bee Honey’ என்ற நிறுவனம் மோரல் காளான்கள் (Morel mushroom), மோரிங்கா (moringa) மற்றும் தேனில் பாதுகாக்கப்படும் குங்குமப்பூ உள்ளிட்ட ஆச்சரியப்படுத்தக்கூடிய சுகாதார தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த மூன்றும் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு பிரிவில் ‘Gulfood Innovation’ விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

3. புரத நீர் (Protein water)
புரதத்தின் மீதான மோகம் குறையாமல் தொடரும் நிலையில், ‘Liife’ என்ற பிராண்ட் அதன் புதிய புரத நீர் தயாரிப்பை வெளியிட்டுள்ளது. 10 கிராம் புரதம் (whey protein) கொண்ட இந்த பானம் பின்வரும் மூன்று சுவைகளில் வருகிறது: எலுமிச்சை இஞ்சி (lemon ginger), ஆரஞ்சு ஜின்ஸெங் (blood orange ginseng) மற்றும் ராஸ்பெர்ரி பீச் (raspberry Peach).

4. சர்க்கரை இல்லாத கேரமல் பாப்கார்ன்
சிங்கப்பூரை தளமாகக் கொண்டு செயல்படும் ‘Zerup’ என்ற நிறுவனம் நெக்கட் பாப் (Nekked Pop) என்ற ஸ்நாக்ஸ் வகையை வெளியிட்டுள்ளது, இது சர்க்கரை, செயற்கை சுவைகள் அல்லது வண்ணங்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட கேரமல் பாப்கார்ன் ஆகும். மோங்க்ஃப்ரூட் (monkfruit) சாற்றைப் பயன்படுத்தி இனிப்பு சேர்க்கப்பட்ட இந்த பிராண்ட் கோலா, திராட்சை மற்றும் வெள்ளை பீச் போன்ற பூஜ்ஜிய சர்க்கரை சோடாக்களையும் வழங்குகிறது.

5. உறைந்த கேரமல் வெங்காயம் (frozen onion)
ஆஸ்திரிய நிறுவனமான ஹோல்ஸ்மேன் (Holzmann) இயற்கையான இனிப்பை அடைய சமைக்கப்பட்ட உறைந்த, பயன்படுத்தத் தயாராக உள்ள கேரமல் வெங்காயத்தை அறிமுகப்படுத்தியது. ஒரு கிலோகிராம் எடை கொண்ட இந்த தயாரிப்பு ஆறு கிலோகிராம் வரை நாம் வழக்கமாக பயன்படுத்தும் வெங்காயத்தை மாற்றும், மேலும் சமையலறையில் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
6. கொலாஜன் துண்டு (Collagen strip)
ஹெல்த் பிராண்ட்டான ‘Co Nature’ விரைவான ஊட்டச்சத்துக்காக நாக்கின் கீழ் வைக்கப்படும் ஒரு புதுமையான கொலாஜன் துண்டை காட்சிப்படுத்தியது. இதனுடன் கேரட் மற்றும் ப்ரோக்கோலி சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் காய்கறி சார்ந்த பானமான ‘Rootiva’வையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியது, இது முடி வளர்ச்சியை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது.
7. சாக்லேட் ஹம்முஸ்
‘Liviano’ என்ற நிறுவனத்தின் சாக்லேட் ஹம்முஸ் (chocolate hummus), பிரீமியம் கோகோவுடன் தயாரிக்கப்பட்டு புரதம் மற்றும் நார்ச்சத்துடன் நிரம்பியுள்ளது, இதை இனிப்புப் பொருளாகப் பயன்படுத்தலாம். இந்த தயாரிப்பும் ‘Gulfood innovation’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

8. ஊட்டச்சத்து ஈஸ்ட்
இந்த பார்மேசன்-சுவை (parmesan) கொண்ட ஊட்டச்சத்து ஈஸ்ட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் புற ஊதா ஒளியால் வினைபுரிந்திருப்பதால் இயற்கையாகவே வைட்டமின் D யை அதிகரிக்கின்றன. இதில் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டால் வைட்டமின் B 12 மற்றும் முழுமையான புரதங்களுடன் தினசரி வைட்டமின் D தேவைகளில் 300 சதவீதத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
9. பழங்களின் கொத்து (Fruit bouquet)
எக்ஸ்போ சிட்டியில் உள்ள துபாய் கண்காட்சி மையத்தில் உள்ள நார்த் ஹால் 12 மற்றும் 13 இல் உள்ள ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, லிச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகக் கொடியின் வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட ஒரு தனித்துவமான பழங்களின் கொத்து பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

10. சாக்லேட் மற்றும் கீரை குக்கீகள்
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கோதுமை மாவு, கொண்டைக்கடலை மாவு, தேங்காய் எண்ணெய் மற்றும் செயற்கை பொருட்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட கீரை கலந்த சாக்லேட் குக்கீகளை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் 93 பெண்களைப் பணியமர்த்துகிறது மேலும் விவசாயம் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel