ADVERTISEMENT

உலகில் முதன் முறையாக தங்கத்தினால் அமைக்கப்படவிருக்கும் தெரு.. துபாய் அறிமுகப்படுத்தும் ‘Gold Street‘

Published: 27 Jan 2026, 7:10 PM |
Updated: 27 Jan 2026, 7:10 PM |
Posted By: Menaka

புதுமைக்கும் ஆடம்பரத்திற்கும் பெயர்போன துபாய் தொடர்ந்து பல்வேறு வித்தியாசமான நடவடிக்கைகளினால் உலகை ஆச்சரியப்படுத்திகொண்டே இருக்கின்றது. அந்த வரிசையில் தற்பொழுது புதிதாக gold distrcit எனும் தங்க மாவட்டத்தை அறிவித்திருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் துபாயில் புதிதாகத் தொடங்கப்படும் தங்க மாவட்டத்தில் (Gold District), தங்கம் கொண்டு கட்டப்படும் உலகின் முதல் ‘தங்கத் தெருவை (Gold Street)’ அமைப்பதற்கான திட்டங்களுடன், துபாய் எமிரேட் வரலாறு படைக்கத் தயாராகி வருகிறது. ‘Ithra Dubai’ என்ற நிறுவனம் அமீரகத்தின் தங்க மாவட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், தங்கம் கொண்டு கட்டப்படவுள்ள இந்தத் ஸ்ட்ரீட்டைப் பற்றிய மேலதிக விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ADVERTISEMENT

“Home of Gold” என்று அழைக்கப்படும் இந்த புதிய துபாய் தங்க மாவட்டம், தங்கக் கட்டி வர்த்தகம் முதல் மொத்த விற்பனை மற்றும் முதலீடு வரை தங்கம் மற்றும் நகைகள் தொடர்பான அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறப்படுகின்றது. இந்த மாவட்டத்தில் ஏற்கனவே தங்கம், நகைகள், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாழ்க்கை முறை பிராண்டுகள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், ஜவ்ஹரா ஜூவல்லரி, மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ், அல் ரொமைசான் மற்றும் தனிஷ்க் போன்ற முக்கிய நகை நிறுவனங்கள் ஏற்கனவே இங்கு செயல்பட்டு வருகின்றன. அதே சமயம், ஜோயாலுக்காஸ் நிறுவனம் 24,000 சதுர அடி பரப்பளவில் ஒரு முதன்மையான கடையை அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. இது மத்திய கிழக்கில் அதன் மிகப்பெரிய கடையாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம் உலகளாவிய தங்க வர்த்தகத்தில் தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில் இந்தத் தொடக்கம் நிகழ்ந்துள்ளது. 2024 மற்றும் 2025-க்கு இடையில், அமீரகம் சுமார் 53.41 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை ஏற்றுமதி செய்துள்ளது. சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, இந்தியா, ஹாங்காங் மற்றும் துருக்கி போன்ற நாடுகளுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்து, தங்க வர்த்தகத்திற்கான உலகின் இரண்டாவது பெரிய இடமாக இது திகழ்கிறது.

இந்நிலையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த தங்க மாவட்டம் துபாயின் பாரம்பரியத்தையும் எதிர்கால லட்சியத்தையும் ஒருங்கிணைக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், தங்கம் என்பது இந்த எமிரேட்டின் கலாச்சார மற்றும் வணிக அடையாளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்று துபாய் பெஸ்டிவல்ஸ் மற்றும் ரீடெயில் எஸ்டாப்ளிஷ்மென்ட்டின் (DFRE) தலைமைச் செயல் அதிகாரி அகமது அல் கஜா கூறியுள்ளார். மேலும், இந்த புதிய மாவட்டம், புதுமை, படைப்பாற்றல் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு நவீன காலத்திற்கு இந்த பாரம்பரியத்தை மறுவடிவமைக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel